Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/காரைக்காலில் மாங்கனி திருவிழா இன்று துவக்கம்

காரைக்காலில் மாங்கனி திருவிழா இன்று துவக்கம்

காரைக்காலில் மாங்கனி திருவிழா இன்று துவக்கம்

காரைக்காலில் மாங்கனி திருவிழா இன்று துவக்கம்

ADDED : ஜூலை 11, 2011 11:11 PM


Google News

காரைக்கால் : காரைக்கால் அம்மையார் கோவிலில், மாங்கனி திருவிழா இன்று துவங்குகிறது.

மாங்கனி வீசும் நிகழ்ச்சி, 14ம் தேதி நடக்கிறது. காரைக்கால் அம்மையாரின் இயற்பெயர் புனிதவதியார். 1,600 ஆண்டுகளுக்கு முன், தனதத்தரின் மகளாக பிறந்த புனிதவதியாருக்கு பரம தத்தருடன் திருமணம் நடந்தது. காரைக்காலில் வணிகம் செய்த பரமதத்தர், தனக்கு கிடைத்த இரு மாங்கனிகளை வீட்டிற்கு அனுப்பினார். புனிதவதியார் வீட்டிற்கு, அடியார் வேடத்தில், சிவபெருமான் வந்தார். பசியோடு வந்த அடியாருக்கு, புனிதவதியார், உணவுடன் மாங்கனி ஒன்றையும் படைத்தார். பின் வீட்டிற்கு வந்த கணவர் பரமதத்தருக்கு, உணவுடன், மாங்கனி ஒன்றை வைத்தார்.



மாங்கனியின் சுவை மிகுதியால், மற்றொரு கனியையும் பரமதத்தனார் கேட்டார். செய்வதறியாது திகைத்த புனிதவதியார், இறைவனை வேண்ட, அவரது கையில் மாங்கனி வந்தது. அதை கணவருக்கு படைத்தார். முன் சாப்பிட்ட கனியை விட, இக்கனி சுவையாக உள்ளது குறித்து, பரமதத்தர் கேட்டார். நடந்ததை புனிதவதியார் கூற, அதை ஏற்க மறுத்த பரமதத்தர், 'மீண்டும் ஒரு மாங்கனியை வரவழைத்துக் கொடு' என்றார். புனிதவதியார் சிவனை நினைத்து வேண்ட, மற்றொரு மாங்கனி, அம்மையாரின் கையில் தோன்றியது. இதைப் பார்த்த பரமதத்தர், தன் மனைவி தெய்வ பிறவி என்று உணர்ந்து, அம்மையாரை விட்டு விலகி, மதுரைக்குச் சென்று மறுமணம் செய்து குழந்தை பெற்று, அதற்கு புனிதவதியார் என, பெயரிட்டு வாழ்ந்து வந்தார்.



கணவரை காண மதுரை சென்ற புனிதவதியாரிடம், பரமதத்தர், குழந்தையுடன் காலில் விழுந்து வணங்கினார். கணவருக்காக தாங்கியிருந்த மேனியை அழித்து, புனிதவதியார், பேய் உருவம் பெற்று, கயிலாயம் சென்று சிவனை காண புறப்பட்டார். கயிலாயம் புனிதமான இடம் என்பதால், பாவப்பட்ட தன் பாதங்கள் படக்கூடாது என்பதற்காக, தலையால் நடந்து, கயிலாயம் அடைந்தார். தாயும் தந்தையும் அற்ற சிவபெருமான், புனிதவதியாரை, 'அம்மையே' என அழைக்க, புனிதவதியார், சிவபெருமான் காலடியில் வீழ்ந்து, வணங்கி ஐக்கியமாகினார் என்பது வரலாறு. நாயன்மார்களில் ஒருவரான புனிதவதியாரின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் வகையில், காரைக்காலில், ஒவ்வொரு ஆண்டும் மாங்கனி திருவிழா நடத்தப்படுகிறது. இத்திருவிழா இன்று, பரமதத்தர் மாப்பிள்ளை ஊர்வலத்துடன் துவங்குகிறது. நாளை, புனிதவதியார் - பரமதத்தர் திருக்கல்யாணம், 14ம் தேதி அடியார் வேடத்தில் சிவபெருமான் வீதி உலா வருவதும், பக்தர்கள் மாங்கனி வீசும் திருவிழாவும் நடக்கிறது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us