ADDED : அக் 10, 2011 02:49 AM
பந்தலூர் : கூடலூர் வனக்கோட்டத்தில், கடும் வெயிலில் மரக்கன்றுகள் நடுவது, சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.காடு வளர்ப்பு திட்டத்தின் கீழ், மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில், காலியாக உள்ள இடங்களில் மரக்கன்றுகள் நடவு செய்யப்படுகின்றன; இதற்காக, மலைப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், நிதி ஒதுக்கப்படுகிறது.
ஒரு எக்டேர் பரப்பளவில் மரக்கன்றுகள் நட 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. கூடலூர் வனக்கோட்டத்தில் நடவு செய்யப்பட்ட மரக்கன்றுகள், குறிப்பிட்ட சில இடங்களை தவிர, மீதமுள்ள இடங்களில் காணாமல் போயுள்ளன. கடந்த 2010ம் ஆண்டு, திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, மலைப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மழை காலங்களில் மரக்கன்றுகளை நடும்போது, மண்ணின் ஈரத்தன்மையால் மரக்கன்றுகள் வளர ஏதுவாக இருக்கும். ஆனால், தற்போது வாட்டி வரும் வெயில் காலத்தில், வனத்துறையினர், மரக்கன்றுகளை நடவு செய்து வருகின்றனர்; கூடலூர் அருகே சங்கிலி கேட், காட்ஸ்புரூக் பகுதிகளில் தலா 10 எக்டேர், பெருங்கரையில் 5 எக்டேர், தேவாலா வனச்சரகம் நாடுகாணி மைன்ஸ் பகுதியில் 15 எக்டேர், சேரம்பாடி புஞ்சைக்கொல்லி, மாதமங்கல் பகுதிகளில் 15 எக்டேர் என, 55 எக்டேரில் மரக்கன்றுகள் நடும் பணி துவக்கப்பட்டுள்ளது. வெயில் காலத்தில் வைக்கப்படும் மரக்கன்றுகள் முறையாக வளருமா? என்பது தான் தற்போதைய கேள்வி.'நெஸ்ட்' அமைப்பின் நிர்வாக அறங்காவலர் சிவதாஸ் கூறுகையில், ''மரக்கன்று என்பது குழந்தைகள் போன்றது. தற்போது நிலப்பகுதி முழுமையாக காய்ந்துள்ள நிலையில், மரக்கன்றுகளை நீரில் நனைத்து நடவு செய்தால் மண்ணின் வெப்பத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல், மரக்கன்றுகள் விரைவில் காய்ந்து விடும். மரக்கன்றுகளை தற்போது நடவு செய்வதை தவிர்த்து, மழை நேரத்தில் நடவு செய்யலாம். வெயிலில் நடவு செய்துள்ள நிலையில், குறைந்தது 4 மாதங்களாவது தண்ணீர் பாய்ச்ச வேண்டும். தவறினால், எதற்காக திட்டம் துவக்கப்பட்டதோ அந்த நோக்கம் நிறைவேறாமல் போய்விடும். நடவு செய்யப்பட்ட மரக்கன்றுகளுக்கு, தொடர்ந்து நீர் பாய்ச்ச வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார். திட்டத்தை முறையாக செயல்படுத்த தவறினால், தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி மண்ணோடு மண்ணாய் போகும் என்பதில் ஐயமில்லை.


