சொலிசிட்டர் ஜெனரல் ராஜினாமா ஏற்பா? சட்ட அமைச்சர் பதில்
சொலிசிட்டர் ஜெனரல் ராஜினாமா ஏற்பா? சட்ட அமைச்சர் பதில்
சொலிசிட்டர் ஜெனரல் ராஜினாமா ஏற்பா? சட்ட அமைச்சர் பதில்

புதுடில்லி : ''சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்ரமணியம் ராஜினாமா விவகாரம் குறித்து, பிரதமர் மன்மோகன் சிங்குடன் பேசி, விரைவில் முடிவு எடுக்கப்படும்'' என, சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.
'2ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கில் மத்திய அரசு சார்பில், சுப்ரீம் கோர்ட்டில், தலைமை வழக்கறிஞரான, கோபால் சுப்ரமணியம் வாதாடி வந்தார்.
இவ்விவகாரத்தில், தன்னை கலந்து ஆலோசிக்காமல் மத்திய அரசு முடிவு எடுத்துள்ளதாகக் குற்றம்சாட்டிய கோபால் சுப்ரமணியம், தன் பதவியை ராஜினாமா செய்து கடிதம் அனுப்பினார். இந்த ராஜினாமா கடிதம் மீது விரைவில் முடிவு எடுக்கப்படும் என, முன்னர் சட்ட அமைச்சராக இருந்த வீரப்ப மொய்லி தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில், மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டதால், வீரப்ப மொய்லிக்குப் பதில், சல்மான் குர்ஷித் சட்ட அமைச்சராகப் பொறுப்பேற்றார்.
இவ்விவகாரம் குறித்து, குர்ஷித், செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: சொலிசிட்டர் ஜெனரல் விவகாரம் குறித்து, பிரதமரிடம் விரைவில் பேச உள்ளேன். தேவையான வழிகாட்டுதல்கள் கிடைத்த பின், இவ்விவகாரத்தில் முடிவு எடுக்கப்படும். இது குறித்து நான் முழுமையான விவரங்களைத் தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது. சுப்ரமணியம், ஒரு சிறந்த வழக்கறிஞர். இச்சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. பல கோணங்களில் இருந்து இதை அணுகினால் தன் முடிவு எடுக்க முடியும். இவ்வாறு குர்ஷித் தெரிவித்தார்.


