சட்டசபையில் கூச்சல், குழப்பம்: தி.மு.க., வெளிநடப்பு
சட்டசபையில் கூச்சல், குழப்பம்: தி.மு.க., வெளிநடப்பு
சட்டசபையில் கூச்சல், குழப்பம்: தி.மு.க., வெளிநடப்பு

சென்னை : சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது, தி.மு.க., உறுப்பினர் துரைமுருகன், 'பாடி லாங்வேஜ்' மூலம் கிண்டல் செய்ததாக அவர் மீது எழுப்பப்பட்ட குற்றச்சாட்டை தொடர்ந்து, தி.மு.க., - அ.தி.மு.க., உறுப்பினர்கள் மத்தியில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
கேள்வி நேரத்தின் போது அ.தி.மு.க., உறுப்பினர் திருச்சி மனோகரன் துணை கேள்வியாக, ''கடந்த ஆட்சியில் சுயநலத்திற்காக சட்டத்தையும், திட்டத்தையும் மாற்றி அமைத்தனர்,'' என பேசிக் கொண்டிருந்தார். அப்போது, தி.மு.க., உறுப்பினர்கள் சிலர் திடீரென எழுந்து, ''கேள்வி நேரத்தில் குற்றச்சாட்டு எழுப்பக்கூடாது,'' என குரல் எழுப்பினர். உடனே அ.தி.மு.க., உறுப்பினர்கள் சிலர் எழுந்து நின்று, தி.மு.க., உறுப்பினர்களுக்கு எதிராக குரல் எழுப்பினர். சபாநாயகர் ஜெயக்குமார், ''உறுப்பினர் மனோகரன் எந்தக் குற்றச்சாட்டும் கூறவில்லை; எனவே, அமைதியாக இருங்கள்,'' என்றார்.
வீட்டு வசதி வாரியத் துறை அமைச்சர் வைத்தியலிங்கம் எழுந்து, ''கடந்த 2006ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை நடந்த தி.மு.க., ஆட்சியில், தி.மு.க.,வினர் எங்களை எந்த அளவுக்கு குற்றச்சாட்டு தெரிவித்து பேசினார்களோ அப்படியெல்லாம் எங்கள் உறுப்பினர்கள் பேசவில்லை,'' என்றார். அவரை தொடர்ந்து உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.பி.முனுசாமி எழுந்து நின்று, ''துரைமுருகன் தனது பாடி லாங்வேஜ் (உடல் மொழி) மூலம் மிகக் கேவலமாக கேலியும், கிண்டலும் செய்து கொண்டிருக்கிறார். அவரது அருவருக்கத்தக்க செயலை, சபாநாயகர் அனுமதிக்கக் கூடாது. அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார். அப்போது, தி.மு.க., உறுப்பினர்கள் அதற்கு ஆட்சேபனை தெரிவித்து குரல் எழுப்பினர். அவர்களை எதிர்த்து, அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களும் ஓங்கி குரல் கொடுத்தனர். இதனால், சபையில் சிறிது நேரம் கூச்சல், குழப்பம் நிலவியது. உறுப்பினர்கள் ஒருவரை நோக்கி ஒருவர் காரசாரமாக பேசினர். சபாநாயகர் ஜெயக்குமார் குறுக்கிட்டு, ''சபையை மதிக்கின்ற வகையில் துரைமுருகன் நடந்து கொள்ள வேண்டும். அமைச்சர் குறிப்பிட்டது போல், 'பாடி லாங்வேஜ்' மூலம் தவறாக நடந்து கொண்டால், உங்கள் மீது நடவடிக்கை எடுக்க நேரிடும்,'' என்றார்.
துரைமுருகன், ''சிவனே என நான் அமைதியாக உட்கார்ந்திருக்கிறேன். என் மீது அபாண்டமான குற்றச்சாட்டுகளை கூறுவது சரியல்ல,'' என தெரிவித்தார். மீண்டும் அமைச்சர் முனுசாமி எழுந்து நின்று, ''பாடி லாங்வேஜ் மூலம் நக்கலாக பார்ப்பது, கேவலமாக சிரிப்பது போன்ற செயல்களில் மூத்த உறுப்பினர் செயல்படுவது, அவைக்கு அழகா? ஏன் அவர் அப்படி நடந்து கொள்கிறார்,'' என்றார். சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், ''அவர்களுடைய தலைவரே இப்படித் தான் நடந்து கொள்வார். தலைவரின் வழியில் தான் அவர்களும் நடப்பார்கள்,'' என்றார். சரத்குமாரின் பேச்சுக்கு, தி.மு.க., உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். உடனே, சட்டசபை தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மற்றும் துரைமுருகன் எழுந்து பேச முயற்சித்தனர். அவர்களை பேச, சபாநாயகர் ஜெயக்குமார் அனுமதிக்கவில்லை. அ.தி.மு.க., உறுப்பினர் வளர்மதி பேசுவதற்கு அனுமதிக்கப்பட்டார். அவர் பேசும்போது, ''துரைமுருகன் இந்த அவையின் நியாயம் பற்றியும், தர்மம் பற்றியும் பேசுவது சரியல்ல. இதே சபையில் முதல்வர் ஜெயலலிதா எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது, அவரது புடவையை இழுத்த துச்சாதனனின் கூட்டம், சபை நடவடிக்கை, நியாயத்தை பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் இல்லை,'' என்றார். இதையடுத்து, துரைமுருகன் எழுந்து நின்று விளக்கம் அளிக்க அனுமதி கேட்டார். அதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்ததால், தி.மு.க., உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.
நந்தியா... மந்தியா? : சட்ட சபையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் பாலகிருஷ்ணன் பேசும்போது, 'தமிழக அரசு செயல்படுத்தும் நல்ல திட்டங்களுக்கு, மத்திய அரசு நந்தி போல் குறுக்கே இருக்கிறது' என்றார். காங்கிரஸ் உறுப்பினர் பிரின்ஸ் பேசும்போது,'மத்திய அரசை,'மந்தி' என்றார். இது, மிகவும் தரக்குறைவாக உள்ளது. அந்த வார்த்தையை, சபைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும். மேலும், உறுப்பினர்கள் பேசும் போது, தரக் குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்தக் கூடாது என்று, சபாநாயகர் அறிவுறுத்த வேண்டும்' என்றார். 'மார்க்சிஸ்ட் உறுப்பினர், 'நந்தி' என்று தான் கூறினார். 'மந்தி' என்று கூறவில்லை' என, சபாநாயகர் கூறினார். அதன்பிறகும், 'இல்லை... இல்லை... உறுப்பினர் அப்படித் தான் பேசினார்' என்றார் பிரின்ஸ். அதன்பின், பாலகிருஷ்ணன் குறுக்கிட்டு,'தமிழக அரசின் திட்டங்களுக்கு தடையாக, 'நந்தி' போல் மத்திய அரசு இருக்கிறது என்று தான் குறிப்பிட்டேன். 'மந்தி' என்று நான் கூறவேயில்லை' என்றார். அதன்பின், காங்., உறுப்பினர் அமைதியானார்.