பெண் வேடத்தில் சென்று டிரைவர் கொலை கொள்ளை கும்பல் சுற்றி வளைத்து கைது
பெண் வேடத்தில் சென்று டிரைவர் கொலை கொள்ளை கும்பல் சுற்றி வளைத்து கைது
பெண் வேடத்தில் சென்று டிரைவர் கொலை கொள்ளை கும்பல் சுற்றி வளைத்து கைது
ADDED : ஆக 08, 2011 11:53 PM
கோவை : கோவை அருகே, நள்ளிரவில் பெண் வேடமிட்டு சரக்கு லாரியை நிறுத்திய கொள்ளையர், டிரைவரை கொலை செய்து, 45 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்றனர்.
இச்சம்பவத்தில் தொடர்புடைய ஐந்து பேர் கும்பலை, போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம், ஒல்லபாளையத்தைச் சேர்ந்தவர் குணசேகரன், 40; லாரி டிரைவர். கடந்த மாதம் 17ம் தேதி, கேரள மாநிலம் கொச்சியில் முந்திரி லோடு ஏற்றி, கோல்கட்டாவுக்கு லாரியை ஓட்டிச் சென்றார். ஈரோடு மாவட்டம், அரச்சலூர், வாய்க்கால்வலசு கிராமத்தைச் சேர்ந்த மாற்று டிரைவர் கருப்பையா, 40, என்பவரும் சென்றார். கோவை அருகே, நீலம்பூர் எல் அண்ட் டி பை-பாஸ் சாலையில் பட்டணம்புதூர் பிரிவை, நள்ளிரவு கடந்தபோது, பெண் வேடமிட்டு லாரியை நிறுத்திய கும்பல், இருவரையும் சரமாரியாக தாக்கியது. இதில், கத்திக்குத்து காயமடைந்த கருப்பையா, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். லாரி கேபினில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, 45 ஆயிரம் ரூபாய் மற்றும் இரு மொபைல் போன்களை கொள்ளையடித்துச் சென்றனர். சூலூர் போலீசார், குற்றவாளிகளை தேடிவந்த நிலையில், கதிர்வேல் பிரகாஷ் என்பவரிடம், கத்தியை காட்டி மிரட்டிய கொள்ளையர், 1,100 ரூபாயை பறித்துச் சென்றனர்.இரு வழக்குகளிலும் ஒரே கும்பல் ஈடுபட்டிருக்கலாம் என, சந்தேகமடைந்த போலீசார், தனிப்படை அமைத்து விசாரித்தனர். கடந்த 4ம் தேதி, பாப்பம்பட்டியிலுள்ள டாஸ்மாக் மதுக்கடை அருகே சென்ற கதிர்வேல், தன்னிடம் கத்தியை காட்டி பணம் பறித்த நபர், நின்றிருப்பதை கண்டு போலீசுக்கு தெரிவித்தார். திண்டுக்கல், ஓடக்கரை கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து, 23, என்பவரை போலீசார் கைது செய்தனர். இவரது வாக்குமூலத்தை தொடர்ந்து, கூட்டாளிகள் ராஜா என்ற காதர், 21, மணிகண்டன், 21, ஜெகதீசன், 35, மற்றும் செல்வக்குமார், 21, ஆகியோரை கைது செய்தனர். கொள்ளை கும்பலை பிடித்த தனிப்படை போலீசாருக்கு, ஐ.ஜி., வன்னியபெருமாள், நேற்று வெகுமதி வழங்கி பாராட்டினார்.


