/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/தி.மு.க.,வுக்கு ஓட்டு போட ஊர் கட்டுப்பாடுதி.மு.க.,வுக்கு ஓட்டு போட ஊர் கட்டுப்பாடு
தி.மு.க.,வுக்கு ஓட்டு போட ஊர் கட்டுப்பாடு
தி.மு.க.,வுக்கு ஓட்டு போட ஊர் கட்டுப்பாடு
தி.மு.க.,வுக்கு ஓட்டு போட ஊர் கட்டுப்பாடு
ADDED : செப் 28, 2011 11:39 PM
ஓசூர்: சூளகிரி அருகே பஞ்சாயத்து தலைவர் தேர்தலில், தி.மு.க., வேட்பாளருக்கு ஓட்டு போட வலியுறுத்தி, ஊர் பஞ்சாயத்தில் தீர்மானம் நிறைவேற்றினர்.
பஞ்சாயத்து தீர்மானத்தை மீறுபவர்கள் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்படுவதோடு, 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என, கட்டப்பஞ்சாயத்து செய்துள்ள இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஒன்றியத்தில் மொத்தம், 42 பஞ்சாயத்துகள் உள்ளன. இவற்றில் சூளகிரி அருகே செம்மபரசனப்பள்ளி பஞ்சாயத்து உள்ளது. இந்த பஞ்சாயத்தில் செம்பரசனப்பள்ளி, மடத்தூர், பீளாளம், பெரிய பாப்பனப்பள்ளி, மயிலேப்பள்ளி, கொரல்தொட்டி, பெரிய தின்னூர் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. பீளாளம் கிராமத்தில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். பஞ்சாயத்தில் அதிகப்பட்சமாக இந்த கிராமத்தில் மட்டும், 569 ஓட்டுகள் உள்ளன. செம்மபரசனப்பள்ளி பஞ்சாயத்து தலைவராக தற்போது அப்பையா உள்ளார். தற்போது நடக்கும் பஞ்சாயத்து தேர்தலில் செம்பரசனப்பள்ளியை சேர்ந்த அ.தி.மு.க., பிரமுகர் சீனிவாசன், பீளாளத்தை சேர்ந்த தி.மு.க., பிரமுகர் சிவசங்கர், மடத்தூரை சேர்ந்த பாப்பிரெட்டி ஆகியோர் போட்டியிடுகின்றனர். பஞ்சாயத்து தலைவர் பதவியை பிடிக்க மூவரும் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. பீளாளம் கிராமத்தில் பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் போட்டியிடும் அப்பகுதியை சேர்ந்த சிவசங்கருக்கு ஆதரவாக ஊர்பஞ்சாயத்தார் செயல்படுகின்றனர். நேற்று முன்தினம் மாலை ஊர் கவுண்டர் சின்னதாயப்பா தலைமையில் ஊர்பஞ்சாயத்து நடந்துள்ளது. இந்த கூட்டத்தில் ஊர்மக்கள், பஞ்சாயத்தார் கலந்து கொண்டனர். ஊர் கவுண்டர் சின்னதாயப்பா மற்றும் ஊர் பஞ்சாயத்தார் கூட்டத்தில், 'பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் போட்டியிடும் சிவசங்கருக்கு ஊர் பொதுமக்கள் அனைவரும் தவறாமல் ஓட்டு போட வேண்டும் ' என, முடிவு செய்துள்ளதாக தன்னிச்சையாக தீர்மானம் நிறைவேற்றினர். ஊர் பஞ்சாயத்தை மீறி யாராவது மற்ற வேட்பாளர்களுக்கு பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் ஓட்டுப்போட்டால், அவர்கள், 5 ஆண்டுகளுக்கு ஊரை விட்டு தள்ளி வைக்கப்படுவர் என்றும், 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதாகவும் தீர்மானம் நிறைவேற்றினர். பஞ்சாயத்து தீர்ப்பால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த மாரப்பா கூறியதாவது: ஒவ்வொரு பஞ்சாயத்து தேர்தலிலும் இதே போல், ஊர்பஞ்சாயத்தார் கூடி யாராவது ஒருவருக்கு ஓட்டு போட கூறி நிர்பந்தம் செய்கின்றனர். மீறி எந்த குடும்பமாவது ஓட்டுபோட்டால், அவர்களுடன் யாரும் பேசாமல் நல்லது, கெட்டது எதுக்கும் கலந்து கொள்ளாமல் ஊரை விட்டு ஒதுக்கி வைத்து விடுகின்றனர். அதனால் ஊருக்கு பயந்து அவர்கள் கூறும் நபருக்கு ஓட்டு போட வேண்டிய உள்ளது. இந்த முறையும் வழக்கம்போல் ஊர்பஞ்சாயத்து கூடி சிவசங்கருக்கு ஓட்டு போட முடிவு செய்துள்ளனர். அபராதம், ஊரை விட்டு ஒதுக்கி வைத்து விடுவார்கள் என்பதால் வேறுவழியில்லாமல் அவருக்குதான் ஓட்டு போட முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


