லண்டனில் கலவரம் குறைந்தாலும், மற்ற பகுதிகளில் வன்முறை தொடர்கிறது
லண்டனில் கலவரம் குறைந்தாலும், மற்ற பகுதிகளில் வன்முறை தொடர்கிறது
லண்டனில் கலவரம் குறைந்தாலும், மற்ற பகுதிகளில் வன்முறை தொடர்கிறது
ADDED : ஆக 11, 2011 12:40 AM
லண்டன் : பிரிட்டன் தலைநகர் லண்டனில் கலவரம் குறைந்து அமைதி திரும்புகிறது.
எனினும், அந்நாட்டின் மற்ற பல நகரங்களில் நேற்று நான்காவது நாளாக கொள்ளை, தீ வைப்பு, தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்தன. இதையடுத்து, கலவரக்காரர்கள் மீது ரப்பர் குண்டுகள், தண்ணீர் பீரங்கித் தாக்குதல் பயன்படுத்த பிரதமர் டேவிட் கேமரூன் அனுமதி அளித்துள்ளார். லண்டனில் துவங்கிய கலவரம், பிர்மிங்காம், நாட்டிங்காம், பிரிஸ்டல், லிவர்பூல், மான்செஸ்டர், லீசெஸ்டர், சால்போர்டு, வெஸ்ட் ப்ரோம்விச், வொல்வர்ஹேம்ப்டன், க்ளவ்செஸ்டர் ஆகிய நகரங்களுக்கு பரவியது. இந்நகரங்களில் உள்ள மார்க் அண்டு ஸ்பென்சர், சோனி போன்ற பிரபல கடைகள் கலவரக்காரர்களால் சூறையாடப்பட்டன. போலீஸ் நிலையங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. கலவரக்காரர்கள் தாக்கியதில், இதுவரை 111 போலீசார் படுகாயம் அடைந்துள்ளனர். இதற்கிடையில், லண்டனில் போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் மூலம் அமைதியை நிலைநாட்டியுள்ளனர். கலவரம் துவங்கிய கடந்த 6ம் தேதி முதல் இதுவரை 1,100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் இளைஞர்கள் என்பதோடு, இவர்களில் இளம் பெண்களும் உள்ளனர். லண்டனின் பல பகுதிகளில், மக்கள் தங்கள் வீடுகள், கடைகளைப் பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். சவுத் ஆல் பகுதியில் உள்ள குருத்வாராக்கள், மசூதிகளைப் பாதுகாக்கும் பணியில், ஆயுதம் ஏந்திய சீக்கியர்கள் ஈடுபட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 786 பேர் லண்டனில் மட்டும் கைதானவர்கள். இவர்கள் அனைவர் மீதான வழக்குகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. பிரதமர் டேவிட் கேமரூன் நேற்று அவசரகால அமைச்சரவைக் கூட்டத்தைக் (கோப்ரா) கூட்டி ஆலோசித்தார். பின் போலீஸ் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன்பின் கலவரக்காரர்களை அடக்க, ரப்பர் குண்டுகள், தண்ணீர் பீரங்கித் தாக்குதல் போன்றவற்றுக்கு அனுமதி அளித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில்,''கலவரக்காரர்களைத் திருப்பித் தாக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. திருப்பித் தாக்கும் நடவடிக்கை துவக்கப்பட்டு விட்டது. அவர்களை அடக்க உறுதியான நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. கடைகளுக்குள் புகுந்து கொள்ளையடித்தவர்கள், அங்குள்ள சி.சி.டி.வி., கேமராக்களில் பதிவான காட்சிகள் மூலம் அடையாளம் கண்டறியப்பட்டு கைது செய்யப்படுவர். சட்டத்தின் கடுமையான தண்டனை அவர்களுக்குக் காத்திருக்கிறது,'' என்றார். இதற்கிடையில் பிர்மிங்காமில், கார் ஒன்று மோதியதில், ஆசியாவைச் சேர்ந்த மூன்று பேர் பலியாயினர். நிலவரம் மோசமாகிக் கொண்டே வருவதை அடுத்து, இன்று பார்லிமென்ட் கூடி ஆலோசிக்க உள்ளது.


