சபரிமலை பெரிய தந்திரிக்கு வரும் 29ம் தேதி சதாபிஷேகம்
சபரிமலை பெரிய தந்திரிக்கு வரும் 29ம் தேதி சதாபிஷேகம்
சபரிமலை பெரிய தந்திரிக்கு வரும் 29ம் தேதி சதாபிஷேகம்
செங்கன்னூர் : பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலின், பெரிய தந்திரியான கண்டரரு மகேஸ்வரருவின் சதாபிஷேகம், வரும் 29ம் தேதி நடத்தப்படுகிறது.
கேரளா பத்தனம்திட்டா மாவட்டத்தில், உலக பிரசித்திப் பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு பரம்பரை பரம்பரையாக தாழமண் என்ற பாரம்பரியமிக்க குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான், தந்திரி (தலைமை அர்ச்சகர்)யாக பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு தான் அதற்கான உரிமை வழங்கப்பட்டுள்ளது.
இக்குடும்பத்தில் தற்போதைய மூத்த உறுப்பினரான, கண்டரரு மகேஸ்வரரு, 84ம் வயதை எட்டி விட்டார். இதையடுத்து வரும் 29ம் தேதி அவருக்கு சதாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அவரது குல தெய்வமான செங்கன்னூர் மகாதேவர் கோவிலில், சிறப்பு பூஜைகளும், யாகங்களும் நடத்தப்பட உள்ளன.
அதேபோல், பல்வேறு கோவில்களில் அவரது ஆரோக்கியத்திற்காக, சிறப்பு அபிஷேக, பூஜைகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இவர் கேரளாவுக்கு வெளியே உள்ள பிற மாநிலங்களில், 700க்கும் மேற்பட்ட கோவில்களில் தந்திரியாக பணியாற்ற உரிமை பெற்றவர். மேலும், அமெரிக்காவில் வாஷிங்டன், ஹூஸ்டன் போன்ற நகரங்களிலும், இலங்கை உள்ளிட்ட பல வெளிநாடுகளில், 300க்கும் மேற்பட்ட கோவில்களில் அய்யப்ப விக்ரகங்களை பிரதிஷ்டை செய்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


