ADDED : ஜூலை 15, 2011 12:44 AM
கோபிசெட்டிபாளையம்: பூதப்பாடி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடப்பு வாரம் பருத்தி வரத்து அதிகரித்தது.
இரு தினங்களில் நடந்த ஏலத்தில் 1.5 கோடி ரூபாய்க்கு பருத்தி வர்த்தகம் நடந்தது. ஈரோடு மாவட்டத்தில் அந்தியூர், பூதப்பாடி, அம்மாபேட்டை, சேலம் மாவட்டம் கொளத்தூர், கண்ணாமூச்சி, நாமக்கல் மாவட்டம் இடைப்பாடி, கொங்கணாபுரம், தேவூர் மற்றும் தர்மபுரி மாவட்டங்களிலும் தற்போது பருவ பருத்தி சீஸனால் அறுவடை நடக்கிறது.
இங்கு உற்பத்தியாகும் பருத்தி அம்மாபேட்டை பூதபாடி ஒழுங்கு முறை விற்பனை கூடத்துக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. சென்ற இரண்டு வாரமாக பருத்தி ஏலம் துவங்கி நடக்கிறது. சென்ற வாரம் 8,500 மூடை பருத்தி வரத்து இருந்தது. நடப்பு வாரம் பருத்தி வரத்து மேலும் கூடி, 11 ஆயிரம் மூடை விற்பனைக்கு வந்தது. ரகம் வாரியாக பருத்தி பிரித்து ஏலம் நடந்தது.பிடி ரகம் குவிண்டால் அதிகபட்சம் 4,000 ரூபாய், குறைந்தபட்சம் 3,600 ரூபாய்க்கும் விற்றன. சுரபி ரகம் அதிகபட்சம் 4,600 ரூபாய்க்கும், குறைந்தபட்சம் 4,100 ரூபாய்க்கும் விற்றன. சென்ற வாரத்தை விட கிலோவுக்கு 2 ரூபாய் குறைந்து காணப்பட்டது. தமிழகத்தில் பல்வேறு பகுதியில் இருந்தும் வியாபாரிகள் ஏலம் பங்கேற்று பருத்தி கொள்முதல் செய்தனர். சென்ற இரு தினங்களில் நடந்த ஏலத்தில் ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு பருத்தி வர்த்தகம் நடந்தது.