Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ 1 கி.மீ.,க்கு ஒரு பைசா கட்டண உயர்வு: ரயில்வே இணை அமைச்சர் தகவல்

1 கி.மீ.,க்கு ஒரு பைசா கட்டண உயர்வு: ரயில்வே இணை அமைச்சர் தகவல்

1 கி.மீ.,க்கு ஒரு பைசா கட்டண உயர்வு: ரயில்வே இணை அமைச்சர் தகவல்

1 கி.மீ.,க்கு ஒரு பைசா கட்டண உயர்வு: ரயில்வே இணை அமைச்சர் தகவல்

ADDED : ஜூன் 27, 2025 06:17 AM


Google News
Latest Tamil News
சென்னை: ''விரைவு ரயில்களில், 1 கி.மீ., துாரத்துக்கு ஒரு பைசா கட்டணம் உயர்த்த பரிசீலனையில் உள்ளது. இதை பிரதமர் மோடி இறுதி செய்வார்,'' என, ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா தெரிவித்தார்.

சென்னை ஐ.சி.எப்., ஆலையில் தயாரிக்கப்படும், வந்தே பாரத் ரயில் ஸ்லீப்பர், அம்ரித் பாரத் ரயில், ஹைட்ரஜன் ரயில் பணிகளை, ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா நேற்று ஆய்வு செய்தார்.

அப்போது, அவர் அளித்த பேட்டி:

ரயில் பெட்டிகள் தயாரிப்பில், ஐ.சி.எப்., ஆலையின் பங்களிப்பு முக்கியமானது. நடப்பு நிதியாண்டில், 3,181 எல்.எச்.பி., பெட்டிகள் உட்பட மொத்தம், 4,356 பெட்டிகள் தயாரிக்கப்பட உள்ளன.

இதுவரை, 88 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டு உள்ளன. தற்போது, ஒன்பது வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.

முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில், டில்லிக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு சில தொழில்நுட்ப மாற்றங்களோடு, சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இரண்டாவது வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில், ஆக., 15லும், மூன்றாவது ரயில் செப்., 15லும் துவக்கப்படும். அதுபோல், தானியங்கி கதவுகளுடன் இயங்கும், 'ஏசி' அல்லாத இரண்டு மின்சார ரயில்கள், டிசம்பருக்குள் தயாரிக்கப்படும்.

இதுவரை ஆறு அம்ரித் பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டு உள்ளன. ஐ.சி.எப்., மற்றும் ஆர்.சி.எப்., ஆலையில், 50க்கும் மேற்பட்ட அம்ரித் பாரத் ரயில்களை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை - டில்லி இடையே இயக்கப்படும், தமிழ்நாடு மற்றும் ஜி.டி., விரைவு ரயில்களுக்கு பதில் அம்ரித் பாரத் ரயில்கள் இயக்கப்படும்.

ஹைட்ரஜன் ரயில் தயாரிப்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இந்த ரயில் சோதனை ஓட்டம், 15 நாட்களில் நடத்தப்படும். பல்வேறு கட்ட சோதனைகள் நடத்திய பின், ஹரியானா மாநிலம், ஜிந்த் - சோனிபெட் இடையே, இந்த ஆண்டின் இறுதியில் இயக்கப்படும்.

ஐ.சி.எப்., மற்றும் பி.இ.எம்.எல்., இணைந்து, மணிக்கு 280 கி.மீ., வேகத்தில் செல்லும், அதிவேக ரயிலை தயாரிக்க உள்ளன. இந்த ரயில் வரும், 2027 ஆகஸ்டில் பயணியர் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

பிரதமர் மோடி ஆட்சியில், ரயில்வே துறை பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது. கொரோனா காலத்தில், ரயில் கட்டணத்தை உயர்த்தவில்லை. தற்போது, விரைவு ரயில்களில், 1 கிலோ மீட்டருக்கு, ஒரு பைசா மட்டுமே உயர்த்தும் திட்டம் பரிசீலனையில் உள்ளது.

இந்த கட்டண உயர்வை, பிரதமர் மோடி மற்றும் ரயில்வே அமைச்சர், ஜூலை 1ம் தேதி முடிவு செய்து அறிவிப்பர். கட்டண உயர்வை எதிர்க்கும் முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர், கள உண்மையை உணர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது, ஐ.சி.எப்., பொதுமேலாளர் சுப்பராராவ் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us