Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/போட்டி பட்டியல் வெளியிட்ட தி.மு.க.,வினர்

போட்டி பட்டியல் வெளியிட்ட தி.மு.க.,வினர்

போட்டி பட்டியல் வெளியிட்ட தி.மு.க.,வினர்

போட்டி பட்டியல் வெளியிட்ட தி.மு.க.,வினர்

ADDED : செப் 27, 2011 12:47 AM


Google News

ஆத்தூர்: ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் நகராட்சி தலைவருக்கு அறிவிக்கப்பட்டுள்ள தி.மு.க., வேட்பாளருக்கு எதிர்ப்பு தெரிவித்து, அனைத்து வார்டுகளிலும் போட்டி பட்டியல் வெளியிட்ட தி.மு.க.,வினர், ஆரவாரத்துடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.

அதனால், நகராட்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் நகராட்சியில், மொத்தம், 18 வார்டுகள் உள்ளன. நரசிங்கபுரம் நகராட்சி தலைவர் வேட்பாளர்களாக, அ.தி.மு.க.,வில் மணிவண்ணன், தி.மு.க.,வில் வேல்முருகன், தே.மு.தி.க.,வில் பச்சமுத்து ஆகியோர் போட்டியிடுகின்றனர். அதில், தி.மு.க., வேட்பாளர் வேல்முருகன், கட்சி வளர்ச்சி பணிகளுக்கு வேலை செய்யாமலும், வார்டு செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகள் நியமிக்காமல், பெயரளவில் செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அவருக்கு, நகராட்சி சேர்மன் 'சீட்' அறிவிக்கப்பட்டதால், தி.மு.க.,வின் தற்போதை கவுன்சிலர்கள் உள்ளிட்ட கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.



இந்நிலையில், நேற்று முன்தினம், நரசிங்கபுரம் சிவன் கோவில் வளாகத்தில், தி.மு.க.,வை சேர்ந்த, 18 வார்டு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடத்தினர். கூட்டத்தில், மக்களிடம் நன்மதிப்பு இல்லாத நகர செயலாளர் வேல்முருகனுக்கு 'சீட்' கொடுத்துள்ளனர். அதனால், நகராட்சி தலைவர் மற்றும், 18 வார்டுகளுக்கு தி.மு.க.,வில் விருப்ப மனு அளித்த நிர்வாகிகள் சுயேட்சையாக போட்டியிடுவதாக அதிரடியாக அறிவித்தனர். தொடர்ந்து, தி.மு.க.,வுக்கு எதிராக போட்டி வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டனர். தகவலறிந்த சேலம் மாவட்ட தி.மு.க., நிர்வாகிகள், சம்மந்தப்பட்ட கட்சியினரிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை.



அதையடுத்து, நேற்று மதியம் 12.30 மணியளவில், நகராட்சி துணை சேர்மன் காட்டுராஜா (எ) பழனிசாமி தலைமையிலான, 500க்கும் மேற்பட்ட தி.மு.க.,வினர், விநாயகபுரத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு, காமராஜர் உள்ளிட்ட சிலைகளுக்கு மாலை அணிவித்து, பட்டாசு வெடித்து ஆரவாரத்துடன் சென்றனர். தொடர்ந்து, நகராட்சி தலைவர் பதவிக்கு சுயேட்சை வேட்பாளராக காட்டுராஜா (எ) பழனிசாமியும், கவுன்சிலர் பதவிக்கு சுயேட்சை வேட்பாளர்களாக 1வது வார்டு சுப்ரமணி, 2வது வார்டு விஜயா ரமேஷ், 3வது வார்டு பிரகாஷ், 4வது வார்டு காயத்ரி பிரகாஷ், 5வது வார்டு புலித்தேவன், 15வது வார்டு சுப்ரமணி, 16வது வார்டு மணி ஆகியோர், நகராட்சி தேர்தல் அலுவலர் சுகுமாரிடம் வேட்புமனு அளித்தனர். மீதம் உள்ள வார்டுகளுக்கு, இன்று வேட்பு மனு செய்ய உள்ளனர். தி.மு.க.,வின் போட்டி வேட்பாளர்கள், சுயேட்சையாக வேட்பு மனு அளித்துள்ள சம்பவம், சேலம் மாவட்ட தி.மு.க.,வுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us