இலவச கால்நடை திட்டத்துக்கு ஆண்டுக்கு ரூ.191 கோடி ஒதுக்கீடு
இலவச கால்நடை திட்டத்துக்கு ஆண்டுக்கு ரூ.191 கோடி ஒதுக்கீடு
இலவச கால்நடை திட்டத்துக்கு ஆண்டுக்கு ரூ.191 கோடி ஒதுக்கீடு

கிருஷ்ணகிரி : தமிழகத்தில், இலவச கால்நடைகள் வழங்க, ஆண்டுக்கு 191 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் முனுசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் முனுசாமி முகாமை தொடங்கி வைத்துப் பேசியது: தமிழகத்தில், அ.தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்று, மூன்று மாதங்கள் ஆன நிலையில், அனைத்துத் துறைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய, முதல்வர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளார். கால்நடைத் துறையில் மாற்றங்களை ஏற்படுத்தி, தமிழகத்தில் வெண்மைப் புரட்சி ஏற்படுத்த, பல்வேறு நலத்திட்டங்களை முதல்வர் அறிவித்துள்ளார்.
கிராமப் புறங்களில் வளர்க்கப்படும் கால்நடைகளுக்கு, நோய் வந்தால் அவற்றை மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்ல முடியாமல், பல கால்நடைகள் இறந்துவிடுகின்றன. இதைத் தடுக்க, கால்நடைகள் அதிகம் உள்ள கிராமத்திற்கு, கால்நடைத் துறை டாக்டர்கள் நேரில் சென்று முகாம் நடத்தி, அங்கு கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, தமிழகம் முழுவதும், 5,500 மருத்துவ முகாம்கள் நடத்த, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி உள்ளிட்ட சில மாவட்டங்களில், பால் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்களுக்கும், நவீன சிகிச்சை அளிக்கப்படும். இலவசத் திட்டங்களை வகுக்கும்போது, திட்டத்தின் மூலம் பயனாளிகள் பொருளாதார மேம்பாடு அடைய வேண்டும். தமிழகத்தில், அ.தி.மு.க., அரசு இலவச கறவை மாடு மற்றும் ஆடுகள் வழங்கும் திட்டத்தை அறிவித்து செயல்படுத்தவுள்ளது.
இலவச கால்நடைகள், பயனாளிகளுக்கு வழங்குவதற்காக, ஆண்டுக்கு 191 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், 5 ஆண்டுகளில், 1,167 கோடி ரூபாய் மதிப்பிலான கால்நடைகள், தமிழகம் முழுவதும் பயனாளிகளுக்கு வழங்கப்படும்.
கடந்த ஆட்சியில் ஏற்பட்ட நிர்வாகச் சீர்கேட்டால், பால் உற்பத்தியாளர்களுக்கு, பால் பணம் வழங்க முடியாத நிலை இருந்தது. அ.தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றவுடன், பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்க, அனைத்து மாவட்டங்களுக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு, பால் உற்பத்தியாளர்களுக்கு நிலுவைத் தொகை வழங்க, 4 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அமைச்சர் முனுசாமி பேசினார்.