Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ வேகமாக பிளவுபடும் ஆப்ரிக்க கண்டம்; ஆய்வாளர்கள் அதிர்ச்சி

வேகமாக பிளவுபடும் ஆப்ரிக்க கண்டம்; ஆய்வாளர்கள் அதிர்ச்சி

வேகமாக பிளவுபடும் ஆப்ரிக்க கண்டம்; ஆய்வாளர்கள் அதிர்ச்சி

வேகமாக பிளவுபடும் ஆப்ரிக்க கண்டம்; ஆய்வாளர்கள் அதிர்ச்சி

UPDATED : ஜூலை 02, 2025 04:52 AMADDED : ஜூலை 02, 2025 04:50 AM


Google News
Latest Tamil News
அடிஸ் அபாபா: ஆப்ரிக்க பிளவு மண்டலத்தில் உள்ள சோமாலியா தட்டு, ஆய்வாளர்கள் கணிப்பை காட்டிலும் கிழக்கு ஆப்ரிக்காவில் இருந்து வேகமாக பிரிவதாகவும், இதனால் நிலத்தால் சூழப்பட்ட பல ஆப்ரிக்க நாடுகளில் கடற்கரை உருவாக உள்ளது. இது நடந்து முடிய பல லட்சம் ஆண்டுகள் ஆகும்.

ஆப்ரிக்க கண்டத்தில் கிழக்கு ஆப்ரிக்க பிளவு மண்டலம் புவியியல் ரீதியாக மிகவும் முக்கியமான மற்றும் துடிப்பான பகுதி. இந்த மண்டலம் பல முக்கிய புவியியல் அம்சங்கள், புவித்தட்டு இயக்கங்கள் மற்றும் இயற்கை நிகழ்வுகளை உள்ளடக்கியது.

இது ஆப்ரிக்க கண்டத்தை பல்வேறு பகுதிகளாக பிரிக்கும் செயல்முறையில் உள்ளது. பூமியினுள் இருக்கும் கருப்பகுதிக்கு மேலே, 'மேன்டில்' எனும் அடுக்கு உள்ளது.

இந்த மேன்டில் பகுதியில் இருந்து மிகை வெப்பமான பாறைகள் மற்றும் 'மாக்மா' எனப்படும் உருகிய நெருப்பு குழம்புகள் மேற்பரப்பை நோக்கி உயர்கின்றன. இதிலிருந்து வரும் அழுத்தம் நிலத்தட்டுகளை நகர்த்துகின்றன.

ஆப்ரிக்காவில் மூன்று முக்கிய 'டெக்டானிக் பிளேட்' எனப்படும் நிலத்தட்டுகள் உள்ளன. ஆப்ரிக்காவின் மேற்கு பகுதியில் நியூபியன் தட்டு, கிழக்குப் பகுதியில் சோமாலியா தட்டு, செங்கடல் மற்றும் அரேபிய தீபகற்பத்தை உள்ளடக்கிய அரேபிய தட்டு உள்ளது.

இந்த தட்டுகள், பூமியினுள் இருந்து மிக அதிக வெப்பத்தால் கிடைக்கும் அழுத்தம் காரணமாக மெதுவாக விலகுகின்றன. இதனால் பிளவு உருவாகிறது. இது பல கோடி ஆண்டுகளாக நடந்து வருகிறது.

இதனால் பல ஆழமான பள்ளத்தாக்குகளும், எரிமலைகளும் ஆப்ரிக்காவில் உருவாக்கியுள்ளன. அடிக்கடி நிலநடுக்கங்களும் ஏற்படுகின்றன. செங்கடலே இவ்வாறு உருவானது தான்.

இந்நிலையில், பிளவு மண்டலத்தில் உள்ள கிழக்கு ஆப்ரிக்க பகுதியில், செங்கடலில் துவங்கி மொசாம்பிக் வரை நிலத்தட்டுகள் விலகல் வேகமாக நடப்பதாக புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதனால் பல ஆண்டுகளுக்கு பின் எத்தியோப்பியா, உகாண்டா, ருவாண்டா ஆகிய நிலத்தால் சூழப்பட்ட நாடுகளில் புதிய கடல் உருவாகும்.

இது குறித்து, 'நேச்சர் ஜியோசயின்ஸ்' இதழில் புதிய ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:


நியூபியன், சோமாலியா, அரேபியா ஆகிய மூன்று நிலத்தட்டுகளின் முக்கோண சந்திப்பில் எத்தியோப்பியாவின் ஆபர் பகுதி அமைந்து உள்ளது.

ஆபர் பகுதியில், 56 கி.மீ., நீளமுள்ள பிளவு 2005ல் உருவானது. இதனுடன், 420-க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் பதிவாகின.

இந்த நிகழ்வு, 'மேன்டில் ப்ளூம்' எனப்படும் புவியின் மேற்பரப்பை நோக்கி வரும் நெருப்பு குழம்புகளால் துாண்டப்பட்டது.

இதனால் ஏற்படும் மிகை வெப்பம் நிலத்தட்டு பிரிவு செயல்முறையை துரிதப்படுத்துகிறது. பிளவு பள்ளத்தாக்குகளை விரிவாக்குகிறது.

ஆபர் பகுதியில், ஒரு நடுக்கடல் முகடு உருவாகத் துவங்கியுள்ளது, இது புதிய கடல் படுகையின் ஆரம்ப கட்டத்தைக் குறிக்கிறது. 50 லட்சம் முதல் 1 கோடி ஆண்டுகளில் ஒரு புதிய கடல் படுகை உருவாகும். இவ்வாறு ஆய்வில் கூறியுள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us