காரைக்கால் அம்மையார் கோவிலில்மாங்கனி திருவிழா கோலாகலம்
காரைக்கால் அம்மையார் கோவிலில்மாங்கனி திருவிழா கோலாகலம்
காரைக்கால் அம்மையார் கோவிலில்மாங்கனி திருவிழா கோலாகலம்
ADDED : ஜூலை 15, 2011 02:40 AM
காரைக்கால்:காரைக்கால் அம்மையார் கோவில் மாங்கனி திருவிழா கோலாகலமாக நேற்று நடந்தது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாங்கனிகளை இறைத்தும், பிடித்தும் மகிழ்ந்தனர்.அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராக விளங்கும் காரைக்கால் அம்மையார், காரைக்கால் கயிலாசநாதர் கோவிலின் பின்புறத்தில் தனி சன்னிதியில் அருள்பாலித்து வருகிறார். அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மாங்கனி திருவிழா நடத்தப்படுகிறது. கடந்த 12ம் தேதி, பரமதத்தர் மாப்பிள்ளை அழைப்புடன் விழா துவங்கியது.நேற்று முன்தினம் புனிதவதியார், தீர்த்தக்கரைக்கு சென்று தீர்த்தவாரியில் கலந்து கொள்ளுதலும், மணமக்கள் கோலத்தில் அலங்கரிக்கப்பட்ட பரமதத்தர், புனிதவதியாருக்கு மங்கள வாத்தியங்கள் ஒலிக்க, வேத மந்திரங்கள் முழங்க திருக்கல்யாணம் நடந்தது. இரவு பிச்சாண்டவ மூர்த்தி வெள்ளை சாத்தி புறப்பாடும், முத்து பல்லக்கில் புனிதவதியார், பரமதத்தர் திருமணக் கோலத்தில் வீதி உலா நடந்தது.நேற்று 9 மணிக்கு, பரமதத்தர் தனது பணியாளர்களிடம் இரண்டு மாங்கனிகளை வீட்டிற்கு கொடுத்து அனுப்புதலும், 10.30 மணிக்கு சிவபெருமான் வெட்டிவேர் மாலையுடன், காவியுடை, ருத்திராட்சம் தாங்கி பிச்சாண்டவராக அவதரித்து அம்மையார் வீட்டிற்குச் செல்லும் வீதி உலா நடந்தது. நான்கு திசைகளிலும் வேத பாராயணம் எதிரொலிக்க, பிச்சாண்டவர் பவழக்கால் சப்பரத்தில் அருள்பாலிக்க, காரைக்காலின் முக்கிய வீதிகள் வழியாக வீதி உலா நடந்தது.பிச்சாண்டவ மூர்த்திக்கு தீபாராதனை காண்பித்த பின், ஒவ்வொரு வீட்டின் மாடியில் இருந்து மாங்கனிகளை பக்தர்கள் வீசினர். சாலை முழுவதும் குவிந்திருந்த பக்தர்கள், வயது வித்தியாசம் இன்றி மாங்கனிகளை பிடித்து மகிழ்ந்தனர்.