உரத்த சிந்தனை:பாலுக்கு வேண்டாம் பஞ்சம்
உரத்த சிந்தனை:பாலுக்கு வேண்டாம் பஞ்சம்
உரத்த சிந்தனை:பாலுக்கு வேண்டாம் பஞ்சம்

பஞ்சாப், உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில், பால் உற்பத்தியை விட, விவசாயப் பொருட்கள் தயார் செய்வது லாபகரமானது. பால் உற்பத்தி செய்யும் விவசாயி, 365 நாட்களும் கால்நடைகளை பராமரிக்க வேண்டும்.பாலில் நல்ல வருமானம் வந்தபோதிலும், எல்லா நாட்களும் வேலை செய்ய வேண்டும். கோதுமை உற்பத்தி, அதிக வருமானம் தந்ததால், பால் வளத்துறை வட மாநிலங்களில் பின்தங்கியது.அறுவடை முடிந்ததும் விடுமுறை எடுத்து, குடும்பத்துடன் வெளியே சென்று வர, கால்நடை இடைஞ்சலாக இருந்ததால், விவசாயிக்கு பால் தொழிலில் ஆர்வம் குறைந்தது; பால் உற்பத்தியும், வட மாநிலங்களில் குறைய ஆரம்பித்தது.ஆனால், வேறு வாய்ப்பு இல்லாத பீகார் மாநிலத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளில் பால் கொள்முதல், கூட்டுறவுத் துறையில் 50 சதவீதம் கூடியுள்ளது.
மாட்டு மாமிசம் ஏற்றுமதி செய்வதில் இந்தியா, இன்று, மூன்றாவது இடத்தில் உள்ளது. வேறு விவசாயத்திற்கு செல்லும் விவசாயிகள், மாடுகளை விற்பதும், கர்ப்பம் தரிக்க தாமதமாகும் மாடுகளை விற்பதும், மாடுகள் இறைச்சியாக மாறுவதும், பால் உற்பத்தியைப் பாதித்தது. இந்த காரணங்களால், பாலின் தேவை கூடியது; அதனுடன் விலையும் கூடியது.
மேலும், கால்நடை தீவனத்திற்கான மூலப்பொருட்களான, எண்ணெய் மற்றும் பிற பிண்ணாக்குகளுக்கு, உலகத் தேவை கூடியது.இந்தியாவிலிருந்து சோயா எண்ணெய், பிண்ணாக்கு முதலியவற்றின் ஏற்றுமதி, 2004 - 05ல், 36 லட்சம் டன்னாக இருந்தது; 2008 - 09ல், 70 லட்சம் டன்னாக கூடியது.உள்ளூரில் பிண்ணாக்கு விலை கூடியதன் காரணமாக, விவசாயிக்கு உற்பத்தி செலவு கூடியது. மாட்டை பராமரிக்கும் செலவு பல மடங்கு கூடியது.இன்று, விலைவாசி கூடி, பால் விலை கூடியதால், விவசாயிக்கு பால் உற்பத்தியில் மறுபடியும் ஆர்வம் வந்துள்ளது.தமிழகம் இன்றைய சூழ்நிலையில், குஜராத் மாநிலத்துக்கு அடுத்த இடத்தில், முறைபடுத்தப்பட்ட பால் கொள்முதல் உள்ளது.தமிழகம், கூட்டுறவுத் துறையில், 22.7 லட்சம் லிட்டரும், தனியார் நிறுவனங்களில், 30 லட்சம் லிட்டரும், ஆக மொத்தம், 52.7 லட்சம் லிட்டர் பால், தினசரி கொள்முதல் செய்து, இரண்டாவது இடத்தில் உள்ளது. மகாராஷ்டிரா மூன்றாவது இடத்திலும், கர்நாடகா நான்காவது இடத்திலும் உள்ளது.
இந்தியாவில் உள்ள மாநிலங்களிலேயே, 52 சதவீத மக்கள், நகரங்களில் குடியிருப்பது, நம் மாநிலத்தில் மட்டுமே. அவர்கள் அனைவருக்கும் வேண்டிய பால் பொருட்கள் தேவையை பூர்த்தி செய்ய, நம் கிராமங்களில் பால் உற்பத்தியை மேலும் கூட்ட வேண்டும்.மேலும், மழை குறைவாக உள்ள நம் மாநிலம், நதி நீருக்கு அண்டை மாநிலங்களை நம்பியிருக்கிறது. அரிசி, கரும்பு போன்ற, தண்ணீர் தேவை மிக அதிகமாக உள்ள விவசாயங்களுக்கு, முக்கியத்துவம் கொடுப்பதை விட, கால்நடை அபிவிருத்திக்கும், பாலுக்கும் முக்கியத்துவம் கொடுத்தால், நம் தேவையை பூர்த்தி செய்து, மற்ற மாநிலங்களில் உள்ள பற்றாக்குறையையும் தமிழகம் தீர்க்க முடியும்; விவசாயிகளுக்கு நல்ல ஒரு எதிர்காலம் அமையும். குஜராத் மாநிலத்தில் மேஹ்சானா மாவட்டத்தில் மட்டும், தினசரி ஏறத்தாழ, 25 லட்சம் லிட்டர் பால், கொள்முதல் செய்யப்படுகிறது.
அம்மாவட்டத்தில் எட்டு ஆண்டுகளுக்கு முன், புள்ளி விவரம் எடுத்தனர். கிராமங்களில் உள்ள விதவை பெண்களுக்கு, அவர்கள் வயதை வைத்து எருமை மாடுகள் வினியோகிக்கப்பட்டன.அதாவது, 25 முதல் 35 வயது உள்ளவர்களுக்கு, மூன்று மாடுகளும்; 35 முதல் 45 வயது - இரண்டு மாடுகளும்; 45 முதல் 55 வயது - ஒரு மாடும் வழங்கப்பட்டன. அவர்களுடைய கடின உழைப்பால், பால் உற்பத்தி கூடியது; விதவை பெண்களும் முழுப்பயன் அடைந்தனர்.வறுமை காரணமாகவோ அல்லது ஆர்வக்குறைவு காரணமாகவோ, உத்தர பிரதேசம், பீகார் மாநிலங்களில், பசு மாடுகள் விற்கப்படுகின்றன. அம்மாநிலங்களில் இருந்து மாடுகளைத் தருவித்து, பால் உற்பத்தியை தமிழகத்தில் கூட்ட முடியும்.மாடுகளை அண்டை மாநிலத்திலிருந்து வருவிக்கும் போது, அவை நம்முடைய சீதோஷ்ண நிலையை பழகுவதற்கும், உணவுப் பழக்கங்களை மாற்றிக் கொள்வதற்கும் நேரம் தேவை. முயற்சியும், பயிற்சியும், விவசாயிகளுக்கு புதிய மாடுகளை கொண்டு வருவதற்கு முன்பே இருந்தாக வேண்டும்; பின்னரே, மாடுகள் கொண்டு வரப்பட வேண்டும்.
மாடுகள் வந்து இறங்கும் மாவட்டங்களில், கால்நடை மருத்துவர்கள் அவற்றை பராமரிப்பதுடன், அண்டை மாநில மாடுகள், நம் ஊருக்கு ஏதேனும் நோய்களை அறிமுகப்படுத்தாமல் இருக்க, தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழகத்தில், கன்றுக்குட்டிகளை நன்கு பராமரிக்கும் அமைப்புகளை உருவாக்க வேண்டும்.முறையாக பராமரிக்கப்பட்டு உணவளித்து, நோய் நொடி இல்லாமல் பாதுகாத்து வந்தால் மட்டுமே, கன்றுகள் பின்னாளில் நல்ல பசுக்களாகி, தமிழகத்தில் கால்நடை வளம் பெருகும்.தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளம், மலை சூழப்பட்டு சமவெளி பகுதி அதிகம் இல்லாததால், பால் இறக்குமதிக்கு தமிழகத்தை நம்பியுள்ளது. மேலும், நமக்கு தேவைக்கு மேல் உற்பத்தி செய்யும் பட்சத்தில், வட மாநிலங்களில் நம் பாலின் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களை விற்று, விவசாயிகளின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த முடியும்.
தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் பாலை, மதிப்புக் கூட்டப்பட்ட ஐஸ் க்ரீம், சீஸ், குழந்தைகளுக்கான பால் பவுடர், நெய், வெண்ணெய் போன்ற பொருட்களாக மாற்றி, இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களில் விற்றால், விவசாயிகளுக்கு நல்ல விலையும், விவசாயம் சார்ந்த பிற தொழிற்சாலைகளும் உருவாக, வாய்ப்பாக அமையும்.பால் வளம் தமிழகத்தைவளப்படுத்தும்ஆயுதம்;உபயோகிப்போமா?இ-மெயில்: rgc@hatsun.comஇரா. க.சந்திரமோகன்தொழிலதிபர்/சிந்தனையாளர்