/உள்ளூர் செய்திகள்/பெரம்பலூர்/வேலைவாய்ப்பு பெருக்குத்திட்டம் : இளைஞர்கள் பயன்பெற அழைப்புவேலைவாய்ப்பு பெருக்குத்திட்டம் : இளைஞர்கள் பயன்பெற அழைப்பு
வேலைவாய்ப்பு பெருக்குத்திட்டம் : இளைஞர்கள் பயன்பெற அழைப்பு
வேலைவாய்ப்பு பெருக்குத்திட்டம் : இளைஞர்கள் பயன்பெற அழைப்பு
வேலைவாய்ப்பு பெருக்குத்திட்டம் : இளைஞர்கள் பயன்பெற அழைப்பு
ADDED : செப் 01, 2011 01:39 AM
பெரம்பலூர்: 'பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள் வேலையற்ற இளையோருக்கான வேலைவாய்ப்பு பெருக்கும் திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்' என கலெக்டர் தரேஸ்அஹமது தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
பெரம்பலூர் மாவட்டத்தில் 150 நபர்கள் கடன் பெற்று 750 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 2011-2012ம் நிதியாண்டுக்கு ரூ. 22.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வேலையற்ற படித்த இளையோர் இத்திட்டத்தின் கீழ் தொடங்க உள்ள தொழில்களின் உற்பத்தி பிரிவில் ஐந்து லட்சம் ரூபாய் வரையிலும், சேவைப்பிரிவில் மூன்று லட்சம் ரூபாய் வரையிலும், வியாபாரங்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரையிலும் உள்ள கடன் திட்டங்களுக்கு கடன்பெற மாவட்டத் தொழில் மைய பொது மேலாளரை தலைவராகக்கொண்ட தேர்வுக்குழு வங்கிகளுக்கு பரிந்துரை செய்யும். திட்ட மதிப்பீட்டில் 15 சத மானியமாக தமிழக அரசு மாவட்ட தொழில் மையம் மூலமாக வழங்கும்.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற பொது பிரிவினர் 18 வயது முதல் 35 வயது முடிய, சிறப்பு பிரிவினர் 18 வயது முதல் 45 வயது முடிய உள்ளவர்கள் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை உள்ளவராக இருக்க வேண்டும். பயனாளிகள் திட்ட மதிப்பீட்டில் பொது பிரிவினர் 10 சதமும், சிறப்பு பிரிவினர் (ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத் திறனாளிகள், மகளிர் மற்றும் திருநங்கைகள்) தங்களது பங்காக 5 சதம் செலுத்த வேண்டும்.
நேரடி விவசாயம் தவிர பொருளாதார அடிப்படையில் லாபகரமான தொழில்கள் தொடங்கலாம். தமிழக அரசின் தொழில் முனைவோர் வளர்ச்சி (இ.டி.பி) நிறுவனத்தால் அளிக்கப்படும் ஏழு நாள்களுக்கான பயிற்சி பெறுதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், பயிற்சி பெற்ற பிறகே கடன் வழங்கப்படும். வங்கி நிர்ணயிக்கும் சாதாரண வட்டி இதற்கும் பொருந்தும். ஐந்து வருடங்களுக்குள் கடனை திரும்ப செலுத்த வேண்டும். மத்திய, மாநில அரசுகள் மூலம் இதர திட்டத்தின் கீழ் மானியத்துடன் கூடிய கடனுதவி பெற்றிருந்தால், இத்திட்டத்தின் கீழ் கடனுதவி பெற முடியாது.
இத்திட்டத்தின் கீழ் கடன்பெற விரும்புவோர் பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், அரியலூர் மாவட்டம், ராஜாஜி நகர், கல்லூரி சாலை, அரியலூர் அலுவலகத்தில் படிவம் பெற்று விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு 04329-222363 என்ற ஃபோன் எண்ணில் தொடர்புகொள்ளலாம்.