ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் சொத்து விவரத்தை தெரிவிக்க வேண்டும்: ஐகோர்ட்
ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் சொத்து விவரத்தை தெரிவிக்க வேண்டும்: ஐகோர்ட்
ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் சொத்து விவரத்தை தெரிவிக்க வேண்டும்: ஐகோர்ட்
ADDED : ஜூலை 13, 2011 01:48 AM
சென்னை : 'தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் தங்கள் சொத்து விவரங்களை பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும்' என, ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் மாதவன், ஐகோர்ட்டில் நேற்று தாக்கல் செய்த மனு: ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், தங்கள் சொத்து விவரங்களை ஆண்டுதோறும் அரசுக்கு தெரிவிக்கின்றனர்.
ஆனால், தகவல் அறியும் உரிமை சட்டத்தில், தங்கள் சொத்து விவரங்களை தர மறுக்கின்றனர். இதுகுறித்து, மாநில தகவல் ஆணைய அதிகாரிகளிடம் கேட்டால், 'அது அவர்களின் தனி மனித உரிமை. அதில் நாங்கள் தலையிட முடியாது' என்கின்றனர். ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளும் மக்கள் சேவகர்கள் தான். எனவே, தகவல் அறியும் உரிமை சட்டத்தில், அவர்களின் சொத்து விவரங்களை பொதுமக்களுக்கு தர, உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனுவை விசாரித்த ஐகோர்ட் நீதிபதிகள், டி.முருகேசன், கே.கே.சசிதரன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், ''ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளும் மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்குபவர்கள் தான். இவர்கள் தங்கள் சொத்து விவரங்களை அரசுக்கு தெரிவிப்பதை போல, தகவல் அறியும் உரிமை சட்டத்தில், பொதுமக்களுக்கும் தெரிவிக்க வேண்டும். இதில் ரகசியம் ஏதும் இல்லை'' என, தெரிவித்துள்ளனர்.