PUBLISHED ON : ஜூலை 12, 2011 12:00 AM

வாரிசுகளை பார்த்தாலே ஓட்டம் பிடிக்கும் கான்ட்ராக்டர்கள்!
''கட்சியில ஒற்றுமை இல்லாம போச்சுன்னு புலம்புறாங்க பா...'' என்றபடி விவாதத்தை துவக்கினார் அன்வர்பாய்.
''எந்தக் கட்சியில ஓய்...'' எனக் கேட்டார் குப்பண்ணா.
''தி.மு.க.,வுல தான்... ஒன்றியங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை, பட்ஜெட்டுக்கு பிறகு தர அரசு முடிவு செஞ்சிருக்காம்... ஆனால், அதுக்குள்ள திட்டங்களை போட்டால், நாலு காசு சம்பாதிக்கலாம்ன்னு உள்ளாட்சி அமைப்புகள்ல நினைக்காங்க... அதனால, ஒன்றியங்களுக்கு நிதி ஒதுக்கச் சொல்லி, விழுப்புரம் மாவட்டத்துல, தி.மு.க., - பா.ம.க., சார்பா, ஒன்றியத் தலைவர்கள் போராட்டம் அறிவிச்சிருந்தாங்க... ஆனா, போராட்டத்துல நூறு பேர் கூட கலந்துக்கலியாம்... காசு செலவழிச்சா தான் கூட்டம் சேர்க்க முடியும்ங்கற நிலைமை வந்திடுச்சாம்... கட்சிக்குள்ள ஒற்றுமை இல்லாம போச்சேன்னு இப்ப புலம்பிட்டு இருக்காங்க பா...'' என்றார் அன்வர்பாய்.
''விதிகளை மீறி அமைச்சர்கள் சிலருக்கு பி.ஏ.,க்களை நியமிச்சிருக்காங்களாம் வே...'' என அடுத்த மேட்டருக்குள் புகுந்தார் பெரியசாமி அண்ணாச்சி.
''விவரமா சொல்லுங்க...'' என்றார் அந்தோணிசாமி.
''அமைச்சரின் அலுவலகங்களுக்கு ஒரு சிறப்பு நேர்முக உதவியாளர், கூடுதல் சிறப்பு நேர்முக உதவியாளர், இளநிலை நேர்முக உதவியாளருன்னு நியமிப்பாங்க... இப்ப இருக்கற அமைச்சர்களுக்கு மொத்தம், 54 பி.ஏ.,க்களை நியமிச்சிருக்காங்க... அரசு சார்புச் செயலர்கள் மாவட்டப் பயிற்சி முடித்து இருக்கணுமாம்... ஆனா, சிலர் தற்போது மாவட்ட பயிற்சியில இருக்காங்களாம்... ஆனா, பயிற்சிக்கு போகாம, பி.ஏ.,க்களா பதவி ஏத்துட்டாங்களாம்... அதே மாதிரி அமைச்சர்களின் துறைகளுக்கு சம்பந்தம் இல்லாத துறையிலிருந்தும், பி.ஏ.,க்களை நியமிச்சிருக்காங்களாம் வே...'' என்றார் அண்ணாச்சி.
''வாரிசுகளை களமிறக்கி வசூல் வேட்டையை ஆரம்பிச்சிருக்கா ஓய்...'' என அடுத்த விவாதத்தில் நுழைந்தார் குப்பண்ணா.
''யாருங்க...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி.
''திருவள்ளூர் மாவட்டத்துல சென்னையை ஒட்டி இருக்கற ரெண்டு தொகுதி ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் எலியும், பூனையுமா இருந்தா... இப்ப ரெண்டு பேரோட வாரிசுகளும் வசூல் வேட்டை நடத்த ஒன்னா சேர்ந்திருக்கா... இதில் ஒரு வாரிசு, தனியார் கம்பெனியில் ஒரு லட்ச ரூபாய் சம்பளத்தில் பார்த்த வேலையை எழுதிக்கொடுத்துட்டு வந்திருக்கார்...
''எண்ணூரில் இருக்கற அரசு நிறுவன பணிகளுக்கான டெண்டர், கிண்டியில உள்ள அலுவலகத்துல வாரந்தோறும் நடக்கறது... தவறாம அங்க போற வாரிசுகள், கான்ட்ராக்ட் எடுக்கறவாகிட்ட கமிஷனை கையோட வாங்கிண்டு போறாளாம்... இதேமாதிரி மாவட்டத்துல இருக்க ஒவ்வொரு கம்பெனி கான்ட்ராக்டர்கள்கிட்டயும் வாரத்துக்கு ஒரு முறை கட்டிங் போடறாளாம்...
''இவாளை பார்த்தாலே கான்ட்ராக்ட்காரா விழுந்தடிச்சு ஓடுறா... இப்படியேபோனா மாஜி மாவட்ட அமைச்சர் சாமியின் தம்பிகளையே இவா மிஞ்சிடுவான்னு கட்சிக்காராளே பேசிக்கறா ஓய்...'' எனக் கூறிவிட்டு புறப்பட்டார்
குப்பண்ணா. மற்றவர் களும் புறப்பட்டனர்.