ADDED : ஜூலை 27, 2011 11:42 PM
புதுச்சேரி : கோரிக்கைகளை வலியுறுத்தி கதர் வாரிய ஊழியர்கள் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கதர் வாரிய தலைமை அலுவலகத்துக்கு எதிரில், கதர் கிராமத் தொழில் வாரிய ஊழியர்கள் நலச்சங்கமும், வாரியத்தின் முன்னேற்ற சங்கமும் இணைந்து நடத்திய இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் சேஷாச்சலம் தலைமை தாங்கினார். கதர் வாரிய தலைமை அலுவலகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கூட்டமைப்பு பொறுப்பாளர்கள் சுதர்சனன், பரிமளரங்கன், சம்பந்தம், ராஜாராமன் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர். கதர் கிராமத் தொழில் வாரிய முன்னேற்ற சங்க தலைவர் கோதண்டராமன் நன்றி கூறினார். முறையற்ற மாற்றல் உத்தரவுகளை உடனடியாக வாபஸ் பெற வேண்டும், அனைத்து ஊழியர்களுக்கும் சீனியாரிட்டியை முறைப்படுத்த வேண்டும். வாரியத்தின் வரவு செலவுகளை முறைப்படுத்த வேண்டும், ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.