ராகுலை சந்திக்க முடியவில்லையே : விவசாயிகள் ஆதங்கம்
ராகுலை சந்திக்க முடியவில்லையே : விவசாயிகள் ஆதங்கம்
ராகுலை சந்திக்க முடியவில்லையே : விவசாயிகள் ஆதங்கம்
லக்னோ : உ.பி.,யில் பூர்வாஞ்சல் பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுலை, சந்தித்து கோரிக்கை மனு அளிக்க விவசாயிகள் திட்டமிட்டிருந்தனர்.
உ.பி., மாநிலத்தில் உள்ள பூர்வாஞ்சல் பகுதியில் கலாசார மையம் அமைப்பதற்காக, கங்கை கரையை ஒட்டியுள்ள கடேசர் கிராம விவசாய நிலங்களை, வாரணாசி மேம்பாட்டு ஆணையம் கையகப்படுத்தியிருந்தது. பாதிக்கப்பட்ட கடேசர் கிராம விவசாயிகள், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கையகப்படுத்திய நிலங்களை தங்களுக்கு திரும்பத் தர வேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல், பூர்வாஞ்சல் பகுதியில் நேற்று முன்தினம் சுற்றுப் பயணம் செய்தார். கடேசர் கிராமம் வழியாக ராகுல் செல்ல உள்ளார் என அறிந்த விவசாயிகள் 200 பேர், தங்கள் பிரச்னையை ராகுலிடம் கூறினால், தீர்வு கிடைக்கும் எனக் கருதி, அவர் வரும் வழியில் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால், ராகுலின் கார், அங்கு நிற்காமல் வேகமாகச் சென்றுவிட்டது. இதனால், தங்களின் கோரிக்கை மனுவை ராகுலிடம் தர முடியாமல், விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
ஏமாற்றம் அடைந்த விவசாயிகளில் ஒருவரான மஞ்சு யாதவ் இதுகுறித்து கூறுகையில், 'எங்கள் நிலங்கள் திரும்பக் கிடைக்க ராகுல் உதவுவார் என்று மிகுந்த ஆவலுடன் நாங்கள் காத்திருந்தோம். ஆனால், வாரணாசியில் நடைபெறும் கட்சி விழாவில் கலந்து கொள்ள அவர் சென்றுவிட்டார். எங்களை அவர் சந்திக்காதது, ஏமாற்றம் அளிக்கிறது' என்றார்.


