உள்ளாட்சி தேர்தலில் உருவாகுமா அ.தி.மு.க., கூட்டணி?
உள்ளாட்சி தேர்தலில் உருவாகுமா அ.தி.மு.க., கூட்டணி?
உள்ளாட்சி தேர்தலில் உருவாகுமா அ.தி.மு.க., கூட்டணி?

உள்ளாட்சித் தேர்தலில் இடப்பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடத்த, தே.மு.தி.க.,வுக்கு அழைப்பு விடுக்காமல் அ.தி.மு.க., மவுனம் காத்து வருகிறது.
அ.தி.மு.க.,வுடன் இரு கம்யூ., கட்சிகளும் முதற்கட்ட பேச்சுவார்த்தை மட்டுமே நடத்தியுள்ளது. சில குட்டிக் கட்சிகளும் அ.தி.மு.க.,வின் அழைப்புக்காக காத்திருக்கின்றன. இதனால், அ.தி.மு.க., தனித்துப் போட்டியிடுமா? அல்லது கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுமா? என்ற குழப்பம் நீடிக்கிறது.உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க., தனித்துப் போட்டியிடும் என அறிவித்துள்ளது. அக்கட்சியின் மாவட்டச் செயலர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் சிலர் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதால், உள்ளாட்சித் தேர்தல் பணியில் அக்கட்சியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனால், தேர்தல் பணியில் ஆளுங்கட்சி சுறுசுறுப்பை காட்டி வருகிறது.பத்து மாநகராட்சிகள் மற்றும் 52 நகராட்சிகளுக்கு ஏற்கனவே வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். நேற்று 72 நகராட்சிகள், 70 பேரூராட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயரை, முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். கூட்டணிக் கட்சியான தே.மு.தி.க.,வை இடப்பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த, அ.தி.மு.க., சார்பில் அழைப்பு விடுக்காமல் மவுனம் காத்து வருகிறது.
இதற்கிடையில், உள்ளாட்சித் தேர்தலில் 51 சதவீதம் இடப்பங்கீட்டை தே.மு.தி.க.,வுக்கு ஒதுக்கீடு செய்யத் தயார் என, முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் கூறியுள்ளார். மேலும் தே.மு.தி.க.,வுடன் கூட்டணி அமைப்பதற்கு பேச்சுவார்த்தை நடத்த, தமிழக காங்கிரஸ் சார்பில் தூது விடப்பட்டுள்ளது என்ற தகவலும் கசிந்துள்ளது.
உள்ளாட்சித் தேர்தலில் தே.மு.தி.க., கழட்டி விடப்பட்டால், அடுத்ததாக என்ன முடிவு எடுப்பது என்பது குறித்தும் தனது கட்சி நிர்வாகிகளுடன் நேற்று விஜயகாந்த் தீவிர ஆலோசனை நடத்தினார்.'தேர்தல் தேதி அறிவிக்கப்படாததால், பொறுமையை கடைபிடிக்கலாம்' என எதிர்க்கட்சி துணைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியதாகவும், அ.தி.மு.க., தரப்பிலிருந்து எந்த சிக்னலும் வராமல் இருப்பதால், முடிவு எடுக்க முடியாமல் தே.மு.தி.க., திணறி வருவதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அ.தி.மு.க., இடப்பங்கீடு குழுவினருடன் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் நடத்திய பேச்சுவார்த்தையில், அந்த இரு கட்சிகளுக்கும் மாநகராட்சி ஒதுக்கப்படாது என அ.தி.மு.க., தரப்பில் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிட்டிங் நகராட்சிகளான பழநி, கோவில்பட்டியை அ.தி.மு.க., எடுத்துள்ளது. எனவே, அ.தி.மு.க., தரப்பில் ஒதுக்கப்படுகிற நகராட்சிகளைத் தான் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் பெற்றுக்கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.
சிறிய கட்சிகளான சமத்துவ மக்கள் கட்சி, அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் சார்பில் சில நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என, முதல்வருக்கு கடிதம் மூலம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், எந்த கட்சிகளிடமும் இடப்பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை நடத்த அ.தி.மு.க., தரப்பு முன்வரவில்லை.இதனால், அ.தி.மு.க., தனித்துப் போட்டியிடுமா? அல்லது இடப்பங்கீட்டில் பேரம் பேசாத கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுமா? என்ற குழப்பமும் நீடிக்கிறது.
-நமது சிறப்பு நிருபர்-


