Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/தொழில் முனைவோர் வளர் திட்ட கடன் தொகையை உயர்த்தி வழங்க கோரிக்கை

தொழில் முனைவோர் வளர் திட்ட கடன் தொகையை உயர்த்தி வழங்க கோரிக்கை

தொழில் முனைவோர் வளர் திட்ட கடன் தொகையை உயர்த்தி வழங்க கோரிக்கை

தொழில் முனைவோர் வளர் திட்ட கடன் தொகையை உயர்த்தி வழங்க கோரிக்கை

ADDED : ஜூலை 31, 2011 01:05 AM


Google News

தொழில் முனைவோர் வளர் திட்டத்தில், வழங்கப்படும் 5 லட்சம் ரூபாய் கடனை 10 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என அரசுக்கு தொழில் முனைவோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய, சொத்து பிணையம் கொடுக்க இயலாத புதிய தலைமுறை தொழில்முனைவோருக்கு உதவும் வகையில், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் (டிக்), தொழில் முனைவோர் வளர் திட்டம் ஒன்றை, கடந்த ஜூலை, 2009ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. புதிய தொழில் துவங்குவும், தொழிலை விரிவாக்கம் செய்யவும், சேவை சார்ந்த தொழில் தொடங்கவும், ஒரு பொருளின் மதிப்பைக் கூட்டி உற்பத்தி செய்யும் தொழில் மற்றும் வாகனங்கள் வாங்குவதற்கு, 30 ஆயிரம் முதல் 5 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது.



இத்திட்டத்தின் மூலம் கடன் பெறுபவர், பிணைய சொத்து, மூன்றாம் நபர் உத்தரவாதம் செய்ய தேவையில்லை. இத்திட்டத்தில், கடன் வாங்குவோர், தொழில் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும். தொடங்கப் போகும் தொழிலில், 10 சதவீதம் மூலதனம் போட வேண்டும். ஏற்கனவே, 'டிக்' கடன் பெற்று, தவணைகளை ஒழுங்காக செலுத்துபவர் அல்லது சமுதாயத்தில் நல்ல நிலையில் இருப்பவர் பரிந்துரை செய்ய வேண்டும். கடன் வாங்குபவரின் மனைவி மற்றும் குழந்தைகள் மீது அசையா சொத்து இல்லாமல் இருக்க வேண்டும்.



கடனை, குறைந்தது, 24 முதல் 60 மாதங்கள் வரை சமமான மாத தவணையில், அசல் மற்றும் வட்டியுடன் திரும்பச் செலுத்த வேண்டும். முதல் ஆறு மாதங்களுக்கு அசலை தவிர்த்து, வட்டி மட்டும் கட்டினால் போதும். அதன் பின்னர், அசல் மற்றும் வட்டியுடன், செலுத்த வேண்டும். ஆண்டு வட்டி 15.75 சதவீதம் வசூலிக்கப்படுகிறது. வட்டி விகிதத்தில், ரிசர்வ் வங்கியின் நடைமுறை கடைபிடிக்கப்படுகிறது. குறிப்பிட்ட சில தொழில் துவங்க அல்லது விரிவாக்கம் செய்ய, வாங்கப்படும் இயந்திரங்கள் மற்றும் தளவாடங்களுக்கு 15 சதவீதம் மாநில அரசு மானியம் வழங்குகிறது. இங்கு கடன் பெறுபவருக்கு தகுதியிருந்தால், அந்த மானியத்தை,'டிக்' நிறுவனமே பெற்று தருகிறது.



இத்திட்டத்தின் கீழ், கடந்த, 2009-10ம் ஆண்டில், 52 பேருக்கு கடன் வழங்க அனுமதிக்கப்பட்டு, 35 பேருக்கு, 78 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில், 2,130 பேருக்கு கடன் வழங்க அனுமதிக்கப்பட்டு, 1,880 பேருக்கு 30 கோடியே 70 லட்சம் ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில், 3,000 பேருக்கு கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறுகிய காலத்திலேயே இத்திட்டத்திற்கு, தொழில் முனைவோர்களிடம் அதிக வரவேற்பு ஏற்பட்டுள்ளது. இதனால், கடன் தொகையை 5 லட்சத்திலிருந்து, 10 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கினால், மேலும் பலர் புதிதாக தொழில் தொடங்குவார்கள். தங்களது தொழில் நிறுவனங்களையும் விரிவுபடுத்திக் கொள்வர். இதன் மூலம், புதிதாக தொழில் முனைவோர் வருவதுடன், பலருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.



'டிக்' மூலம் கடன் பெற்ற புதுக்கோட்டையைச் சேர்ந்த சிற்ப கலைஞர் லஷ்மணன் கூறும்போது, 'ஆரம்பத்தில், சுத்தியல் மற்றும் உளியைக் கொண்டு, சிற்ப வேலையில் ஈடுபட்டு வந்தேன். 'டிக்'கில் கடன் பெற்று, இயந்திரங்கள் மூலம் சிற்ப பணியை மேற்கொண்டு வருகிறேன். இரண்டு பேருக்கு வேலை வாய்ப்பும் வழங்கியுள்ளேன். தற்போது, விலைவாசி அதிகரித்துள்ளதால், செலவினங்களும், மூலப் பொருட்களும் உயர்ந்து விட்டது. எனவே, கடன் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்' என்றார்.



தமிழக அரசு பங்கு மூலதனத்தை எதிர்பார்க்கும் 'டிக்' : ஆந்திரா, கேரளா, கர்நாடகம் போன்ற மாநிலங்களில், உள்ள அரசு தொழில் முதலீட்டு கழகங்களுக்கு, அம்மாநில அரசுகள், குறிப்பிட்ட தொகையை ஆண்டுதோறும் பங்கு மூலதனமாக வழங்குகின்றன. இருப்பினும், மற்ற மாநில தொழில் முதலீட்டு கழகங்களை விட,'டிக்' சிறப்பான சேவையாற்றி வருகிறது. எனவே, தமிழக அரசு, 'டிக்' நிறுவனத்திற்கு, ஆண்டுதோறும் பங்கு மூலதனமாக, குறிப்பிட்ட தொகையை வழங்கினால், 'டிக்' அதன் சேவையை மேலும் விரிவுபடுத்தி, குறு மற்றும் சிறு தொழில்களுக்கு அதிகளவில் கடன் வழங்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.



வீ.அரிகரசுதன்







      Our Apps Available On




      Dinamalar

      Follow us