Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/சப்பாந்தோடு கிராமத்தில் நாள் தோறும் "சர்க்கஸ்'

சப்பாந்தோடு கிராமத்தில் நாள் தோறும் "சர்க்கஸ்'

சப்பாந்தோடு கிராமத்தில் நாள் தோறும் "சர்க்கஸ்'

சப்பாந்தோடு கிராமத்தில் நாள் தோறும் "சர்க்கஸ்'

ADDED : ஜூலை 17, 2011 01:28 AM


Google News

பந்தலூர் : சேரங்கோடு ஊராட்சிக்குட்பட்ட சப்பாந்தோடு கிராமத்திற்கு சாலை, பாலம், குடியிருப்பு வசதிகள் இல்லாமல் மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

பந்தலூர் அடுத்துள்ள சேரங்கோடு ஊராட்சியின் 2ம் வார்டுக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது சப்பாந்தோடு கிராமம். பந்தலூர்-கோழிக்கோடு நெடுஞ்சாலையில் சேரம்பாடி மின்வாரிய அலுவலகம் எதிரில் சப்பாந்தோடு கிராமத்திற்கு செல்லும் சாலை தனியார் எஸ்டேட் வழியாக செல்கிறது. குண்டும் குழியுமாக சுமார் அரை கிலோமீட்டர் தூரம் கற்கள் பதித்த சாலையும், மீதமுள்ள சுமார் 2 கி.மீ., தூரம் மண் சாலையும் செல்கிறது.



இந்த சாலை வனப்பகுதி வழியாக செல்கிறது. கடந்த 15 நாட்களுக்கும் மேலாக 10 யானைகள் கொண்ட கூட்டம் முகாமிட்டுள்ளது. இதனால், வனப்பகுதி சாலை வழியாக செல்லும் தொழிலாளர்கள், மாணவர்கள் உயிர் பீதியுடன் நடந்து செல்ல வேண்டியுள்ளது. அத்துடன் சாலையின் நடுவில் பாயும் இரண்டு நீரோடைகளை கடந்து செல்ல பாலம் வசதியில்லாததால், இப்பகுதி மக்கள் மரத்தினாலான பாலத்தை அமைத்து பயன்படுத்தி வருகின்றனர். கோடை காலத்தில் இந்த பாலங்களை கடந்து செல்வதில் பிரச்னை இல்லாவிட்டாலும், மழை காலங்களில் நீரோடையில் நீர்வரத்து அதிகரித்தால் பாலத்தை கடந்து செல்ல இயலாமல் கடும் அவதியடைந்து வருகின்றனர்.



அதில் ஒரு பாலத்தை சீரமைக்க கடந்த நிதியாண்டில் சேரங்கோடு ஊராட்சி மூலம் 40 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்தும், யாரும் பணியை டெண்டர் எடுக்காததால் நிதி திரும்பி சென்றுவிட்டது. இரண்டு மரங்கள் மட்டுமே உள்ள ஒரு பாலத்தில் மாணவர்கள் காலையில் பள்ளிக்கு செல்ல வரும்போது, பெரியவர்கள் இருவர் பாலத்தின் இரண்டு பக்கங்களிலும் நின்று கயிறு ஒன்றை பிடித்துக்கொள்ள, அதனை பிடித்தபடி 'சர்க்கஸ்' பாலத்தை கடக்கின்றனர். இது மட்டுமல்லாமல், இப்பகுதியில் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாமல், மக்கள் கடும் அவதிப்படுகின்றனர். எனவே, சப்பாந்தோடு கிராமத்தை அரசு அதிகாரிகள் பார்வையிட்டு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us