Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/மயில்கள் அழிவதைத் தடுக்க வாய்ப்பில்லை

மயில்கள் அழிவதைத் தடுக்க வாய்ப்பில்லை

மயில்கள் அழிவதைத் தடுக்க வாய்ப்பில்லை

மயில்கள் அழிவதைத் தடுக்க வாய்ப்பில்லை

ADDED : ஜூலை 14, 2011 01:39 AM


Google News
Latest Tamil News

'தமிழகத்தில் சுதந்திரமாக உலா வரும் மயில்களுக்கு சரணாலயம் அமைப்பதற்கு வாய்ப்பே இல்லை' என, தமிழக வனத்துறையின் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் மதுரையில் திருப்பரங்குன்றம், நெல்லை, தென்காசி ஆகிய பகுதிகளில் அதிகமாக மயில்கள் உள்ளன. ஈரோட்டில் குன்னத்தூர், திருப்பூர், கோபி ஆகிய பகுதிகளில் அதிகமாக மயில்கள் உள்ளன. தற்போது மனிதனால் அழிக்கப்பட்டு வரும் பறவையினங்களின் பட்டியலில், மயிலும் சேர்ந்து விட்டது என்பது வன ஆர்வலர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தேசிய பறவை என்று பெருமிதமாகக் கருதப்படும் மயில்கள் அழிவு தடுக்க முடியாதது என்ற நிலை உருவாகி வருகிறது.

தமிழகம் முழுவதிலும் தோகைக்காகவும், இறைச்சிக்காகவும், விவசாயிகளின் கோபத்தாலும் அழியும் மயில்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் பயிர்களை நாசம் செய்த, 15 மயில்கள் கொல்லப்பட்ட போது தான் வனத்துறையினரே விழித்துக் கொண்டனர்.

பயிர்களையும், விவசாயிகளையும்,மயில்களையும் காப்பாற்ற வேண்டுமானால், மயில்கள் சரணாலயம் அமைக்கப்பட வேண்டும் என்றும் வனத்துறையினருக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். ஆனால், மயில்கள் சரணாலயம் அமைக்க வாய்ப்பே இல்லை என்று வனத்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து வனத்துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது: முருகனின் வாகனமாக கருதி மயிலை வழிபட்டவர்கள் நம் நாட்டு விவசாயிகளும், மக்களும் தான். ஆனால், தற்போது அவர்களே மயிலுக்கு எமனாகி விட்டனர் என்பது வருத்தம் தரக்கூடிய விஷயம் தான். வனப்பகுதியை மக்கள் ஆக்கிரமித்ததால்தான், மயில்கள் உணவு தேடி வயலுக்குள் தஞ்சம் அடைகின்றன.

விவசாய நிலத்தை பாதுகாக்க, மயில்களை காட்டில் கொண்டு விட்டாலும், அது திரும்பவும் ஊருக்குள் வர வாய்ப்புகள் அதிகம். அதே போல், சுதந்திரமாக சுற்றி திரியும் மயில்களுக்கு சரணாலயம் அமைக்க வாய்ப்பில்லை. ஏனெனில், ஒரு நாளைக்கு மயில்கள் நூறு கிலோமீட்டர் எல்லையை பறந்து கடக்கவல்லது. எனவே அதனை சரணாலயத்துக்குள் முடக்குவது என்பது சாதாரணமான காரியம் அல்ல. அதனால் தமிழகத்தில் மயில்கள் சரணாலயத்துக்கு வாய்ப்பில்லை.

மயில்களால் விவசாய நிலங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால், வனத்துறையில் நஷ்ட ஈடு வழங்கப்படும். மயில்கள் கொலையை தடுக்க, வனக் குற்ற சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

- நமது சிறப்பு நிருபர் -







      Our Apps Available On




      Dinamalar

      Follow us