பின்தங்கியோருக்கு 1.86 லட்சம் வீடுகள் கட்டித்தர மகாராஷ்டிரா அரசு திட்டம்
பின்தங்கியோருக்கு 1.86 லட்சம் வீடுகள் கட்டித்தர மகாராஷ்டிரா அரசு திட்டம்
பின்தங்கியோருக்கு 1.86 லட்சம் வீடுகள் கட்டித்தர மகாராஷ்டிரா அரசு திட்டம்
ADDED : ஜூலை 26, 2011 11:47 PM

நாக்பூர்:மத்திய அரசின் 'இந்திரா அவாஸ் யோஜனா' திட்டத்தின் கீழ்,
பின்தங்கிய பிரிவினருக்கு, 1 லட்சத்து, 86 ஆயிரம் வீடுகள் கட்டித்தர,
மகாராஷ்டிரா மாநில அரசு திட்டமிட்டுள்ளது.கட்டடம் கட்டுவதற்கு தேவையான,
மணல், செங்கல், சிமென்ட், கம்பி ஆகியவற்றின் விலை, நாளுக்கு நாள்
அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இதனால், ஏழைகள் சொந்த வீடுகட்டுவது என்பது
கனவாகவே உள்ளது. இந்நிலையில், 'இந்திரா அவாஸ் யோஜனா' திட்டம் 2009 -10ம்
ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், ஏழைகளுக்கும், வறுமை
கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கும் என, மொத்தம் 10 லட்சம் வீடுகளை
கட்டித்தர மகாராஷ்டிரா அரசு திட்டமிட்டுள்ளது. 2008ம் ஆண்டில், பெயர் பதிவு
செய்தவர்களுக்கு வீடுகள் அளிக்கப்படும்.இதற்காக, எஸ்.சி., பிரிவினரின், 1
லட்சம் விண்ணப்பங்கள் உட்பட, 3 லட்சத்து, 50 ஆயிரம் விண்ணப்பங்கள்,
அம்மாநில சமூக நீதித்துறைக்கு வந்துள்ளன. கட்டப்படும் வீடுகளில், 60
சதவீதம் எஸ்.சி., பிரிவினருக்கும், 15 சதவீதம் சிறுபான்மையினர் உள்ளிட்ட
மற்ற பிரிவினருக்கு ஒதுக்கப்படும்.மகாராஷ்டிரா மாநில சமூக நீதித்துறை
அமைச்சர், சிவாஜிராவ் மோகே இதுகுறித்து கூறுகையில், 'விதிமுறைகளின்படி
விண்ணப்பித்தவர்களுக்கு ஒதுக்கப்படும் மனைகளில், வீடுகள் கட்டித்தரப்படும்.
இந்த திட்டத்தின்படி, நகராட்சி எல்லைக்குள்ளும், அதற்கு வெளியேயும்
வீடுகள் கட்டப்படும். மேற்கு மகாராஷ்டிரா மற்றும் கொங்கன் பகுதி உள்ளிட்ட, 9
மாவட்டங்களில் இத்திட்டத்திற்கு நல்ல வரவேற்புள்ளது. வறுமைக் கோட்டிற்கு
கீழ் உள்ள மக்கள் மற்றும் வறுமை கோட்டிற்கு சற்று மேல் உள்ள மக்களுக்கு,
இந்த வீடுகள் ஒதுக்கப்படும். இத்திட்டத்தில் ஜில்லா பரிஷத்தும் இணைந்து
செயல்படுகிறது' என்றார்.சமூக நல மண்டல அதிகாரி சஞ்ஜீவ் கேட் கூறுகையில்,
'ஏழைகளுக்கு வீடு கட்டித்தரும் திட்டத்திற்கான நிலங்கள், பற்றாக்குறையாக
உள்ளது. மத்திய அரசு கொடுத்த வடிவமைப்பின்படி, வீடுகள் கட்டப்படும்.
விதிமுறையை மீறி, மத்திய தரப்பினருக்கு வீடு ஒதுக்கப்படாது; அரசியல்
நெருக்கடி ஏதுமின்றி இத்திட்டம் நிறைவேற்றப்படும். 2010 - 11ம் ஆண்டுக்கு
4, 965 வீடுகள் கட்ட திட்டமிட்டுள்ளோம். இதில், 1, 363 வீடுகள் ஏற்கனவே
கட்டப்பட்டு தயாராகி விட்டன' என்றார்.