PUBLISHED ON : செப் 08, 2011 12:00 AM

காட்சி மாறிப் போச்சு!
ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்தபோது, காங்., தலைவர்களுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது.
ஹசாரே முன்வைத்த, மூன்று அம்ச கோரிக்கைகளை எப்படி தீர்த்து வைப்பது என, தெரியாமல், காங்., தலைவர்கள் மண்டை காய்ந்து போயினர்.பலமுறை கூடி, ஆலோசனை நடத்தியும், ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. வேறுவழியில்லாமல், பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரும், சட்ட நிபுணருமான அருண் ஜெட்லியின் உதவியை நாடினர். பார்லிமென்டில், காங்கிரஸ் கட்சியினரோடு, முட்டல், மோதல் போக்கை கடைபிடித்தாலும், ஹசாரே பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு, காங்கிரசுக்கு உதவ, அருண் ஜெட்லி முன்வந்தார்.ஹசாரே குழுவுக்கு அதிருப்தி ஏற்படாமல், பார்லிமென்டில் தீர்மானம் நிறைவேற்றுவது எப்படி, கூட்டாட்சி முறைக்கு பாதிப்பு ஏற்படாமல், மாநிலங்களில் லோக்ஆயுக்தா அமைப்பை அமைப்பது எப்படி என்பது பற்றி, தெளிவான விளக்கங்களை அளித்தார், அருண் ஜெட்லி.அவரின் திட்டத்தை அப்படியே செயல்படுத்தினர், ஆளும் கட்சியினர். இதற்கு ஹசாரேவும் ஒப்புதல் அளித்து, பிரச்னை சுமுகமாக தீர்ந்து, நிம்மதி பெருமூச்சு விட்டனர், காங்., தலைவர்கள்.ஆனாலும், அருண் ஜெட்லி, தக்க காலத்தில் செய்த உதவியை, அவர்கள் மறக்கவில்லை. முன்பெல்லாம், பார்லிமென்ட் வளாகத்தில் அருண்
ஜெட்லியை பார்த்தாலே, முறைத்துக் கொண்டு செல்லும், கதர்ச்சட்டைகள், இப்போதெல்லாம், அவரைப் பார்த்தவுடன், கையெடுத்து கும்பிடாத குறையாக, உணர்ச்சி வசப்படுகின்றனர்.