பி.இ.,கவுன்சிலிங்கில் குளறுபடி : மாணவர்கள்,பெற்றோர் அதிர்ச்சி
பி.இ.,கவுன்சிலிங்கில் குளறுபடி : மாணவர்கள்,பெற்றோர் அதிர்ச்சி
பி.இ.,கவுன்சிலிங்கில் குளறுபடி : மாணவர்கள்,பெற்றோர் அதிர்ச்சி

சிவகங்கை : காரைக்குடி அழகப்பா அரசு பொறியியல் கல்லூரி கவுன்சிலிங் மைய கம்ப்யூட்டர் 'சர்வரில்' ஏற்பட்ட கோளாறால், நேற்று கவுன்சிலிங்கில் குளறுபடி ஏற்பட்டது.
2ம் நாளான நேற்று கவுன்சிலிங்கிற்கு கெமிக்கல், டெக்ஸ்டைல்ஸ் அண்டு லெதர் பிரிண்டிங், சிவில் பிரிவில் சேர 400 மாணவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். மாணவ, மாணவிகள், பெற்றோருடன் நேற்று அதிகாலை 5 மணிக்கே கல்லூரி வளாகத்தில் அமர்ந்திருந்தனர்.
காலை 8 மணிக்கு கெமிக்கல் பிரிவு மாணவர்கள் அழைக்கப்பட்டனர். இவர்களுக்கான கவுன்சிலிங் முடிய பிற்பகல் 4 மணி வரை ஆனது. இதனால், லெதர் பிரிண்டிங், சிவில் பிரிவில் சேர வந்த மாணவர்கள், கவுன்சிலிங்கில் பங்கேற்க முடியாமல் பெற்றோருடன் பல மணி நேரம் கல்லூரி வளாகத்தில் காத்திருந்தனர்.
குளறுபடி: கல்லூரி மையத்தில், பொருத்திய கம்ப்யூட்டர் சர்வரில் ஏற்பட்டகோளாறால் கவுன்சிலிங் தாமதமானது. காரணம் தெரியாத நிலையில் பெற்றோர்கள், மாணவர்கள் கல்லூரி பேராசிரியர்களிடம் தகராறில் ஈடுபட்டனர். சர்வர் பிரச்னையை சரி செய்த பின், விரைவில் கவுன்சிலிங் நடத்துவோம், என்றனர்.
சேலத்தை சேர்ந்த சகாதேவன் கூறுகையில்,'' கவுன்சிலிங் நடத்துவதற்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம் முழுமையாக செய்யவில்லை. இதனால், நாங்கள் சாப்பாடு இன்றி, காலையில் இருந்து காத்து கிடந்தோம்,'' என்றார்.
கல்லூரி முதல்வர் (பொறுப்பு) மாலா கூறுகையில்,'' கம்ப்யூட்டர் சர்வரில் ஏற்பட்ட பிரச்னையை தீர்த்து விட்டோம். பிற்பகல் 3.30 மணி முதல் 'சிவில்' கவுன்சிலிங் துவங்கி விட்டது. இரவுக்குள் முடித்து விடுவோம். நாளை (இன்று) முதல் வழக்கம் போல் கவுன்சிலிங் நடக்கும்,'' என்றார்.