மயக்க ஊசிக்கு காட்டு யானை பலி; வனத்துறையினர் "கிலி'
மயக்க ஊசிக்கு காட்டு யானை பலி; வனத்துறையினர் "கிலி'
மயக்க ஊசிக்கு காட்டு யானை பலி; வனத்துறையினர் "கிலி'

கோவை : மயக்க ஊசி செலுத்தியதில் காட்டு யானை இறந்து போனது தொடர்பாக விசாரிக்க வந்த அதிகாரி, அவசர கதியில் அரைகுறையாக ஆய்வு நடத்தி விட்டு சென்னை திரும்பினார்.
இரவு நேரத்தில் இந்த முயற்சியை மேற்கொண்டதே மரணத்துக்குக் காரணமென, குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுபற்றி விசாரிப்பதற்காக, தமிழக வனத்துறையின் தலைமை வனப்பாதுகாவலர் (வன உயிரினம்) இந்தர்சமேஜாவை, விசாரணை அதிகாரியாக வனத்துறை நியமித்துள்ளது. நேற்று காலையில் அவர் கோவை வந்தார். ஆண் யானை பலியான இடத்துக்கு அவரை வனத்துறையினர் அழைத்துச் சென்றனர். கோவை டி.எப்.ஓ., திருநாவுக்கரசு, உலக வன உயிரின நிதியத்தின் அஜய் தேசாய், வனத்துறை டாக்டர்கள் கலைவாணன், மனோகரன், ரேஞ்சர் ராஜேஸ்வரன் மற்றும் வனத்துறையினர் உடன் சென்றனர்.
யானைக்கு ஊசி செலுத்தப்பட்ட இடம், அது இறந்து கிடந்த இடம் ஆகியவற்றை வனத்துறையினர் அவருக்கு நேரில் காண்பித்து, நடந்த சம்பவத்தை விளக்கினர். இறந்து போன யானைக்கு மயக்க ஊசிக்கு பதிலாக, அதிகளவு தூக்கம் வரச் செய்யும், 'ஜைலசின்' என்ற மருந்தைச் செலுத்தியதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர். இரவு நேரத்தில் ஏன் இதைச் செய்தீர்கள் என்று, இந்தர்சமேஜா கேள்வி எழுப்பினார். அதற்கு, இரவு நேரத்தில் மட்டுமே சமவெளிப்பகுதிக்கு யானைகள் வருவதால், இரவில் இந்த முயற்சியைச் செய்ததாக அவர்கள் தெரிவித்தனர். யானைக்கு தூக்க மருந்தைச் செலுத்திய பின், செங்கல் சூளை தொழிலாளி ஒருவர், சத்தம் போட்டதால் அந்த யானை ஓடி விட்டதாகவும் டாக்டர்கள் கூறினர்.
அந்த யானையைப் பின்தொடர்ந்து செல்லும் போது, இடையில் வந்த மேலும் இரண்டு ஆண் யானைகள் தங்களைத் துரத்தியதாகவும், அதனால் 12.20க்கு தூக்க மருந்து செலுத்திய யானையை 1.20 மணிக்குத் தான் கண்டுபிடிக்க முடிந்ததாகவும், அதற்குள் அந்த யானை இறந்து போயிருந்ததாகவும் டாக்டர் கலைவாணன் விளக்கினார்.
காட்டு யானையைப் பின் தொடர்ந்த போது, சத்தம் போட்டதாக வனத்துறையினர் கூறிய செங்கல் சூளை தொழிலாளர்களை நேரில் சந்தித்த இந்தர்சமேஜா, அவர்களிடம், 'என்ன நடந்தது' என்று விசாரித்தார். யானை புதைக்கப்பட்ட இடத்தையும் நேரில் பார்த்து, பல்வேறு குறிப்புகளையும் அவர் எடுத்துக் கொண்டார். காட்டு யானை மரணம் பற்றி பல்வேறு சந்தேகங்களை எழுப்பிய கானுயிர் ஆர்வலர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினர் பலரும் விசாரணை அதிகாரியைச் சந்திக்க நேற்று முயற்சி செய்தனர். ஆனால், அவர்கள் வருவதற்குள் அவசர அவசரமாக அங்கிருந்து புறப்பட்ட அவர், நேற்று மாலையில் விமானம் மூலமாக சென்னை திரும்பினார். காட்டு யானை உயிரிழந்ததன் எதிரொலியாக, 'ரேடியோ காலரிங்' பொருத்தும் நடவடிக்கை, வனத்துறை மேலிடத்தின் உத்தரவின்படி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக, வனத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
களமிறங்காத கந்தசாமி!
கோவை மண்டல வனப்பாதுகாவலராக உள்ள கந்தசாமி, இங்கு பொறுப்பேற்று பல மாதங்களாகியும், இதுவரை எந்த பிரச்னைக்கும் எட்டிக் கூடப் பார்ப்பதே இல்லை. நீலகிரி வடக்கு, தெற்கு, கோவை மற்றும் கூடலூர் ஆகிய நான்கு வனக்கோட்டங்களிலும் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்ட போதும், அவர் களப்பணிக்கு வருவதே இல்லை. தலைமை வனப்பாதுகாவலர் நேற்று விசாரணைக்கு வந்த போதும், அங்கே வராமல் 'ஆப்சென்ட்' ஆனார் கந்தசாமி.
-நமது நிருபர்-