ADDED : செப் 06, 2011 01:01 AM
புதுச்சேரி: பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் நேற்று கடலில் சங்கமம் செய்யப்பட்டன.
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, விநாயகர் சதுர்த்தி விழா பேரவை சார்பில் புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் 108 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடந்தது. இந்த சிலைகளை கடலில் சங்கமம் செய்ய சாரம் அவ்வை திடலில் இருந்து ஊர்வலம் புறப்பட்டது. ஊர்வலத்தை வைத்திக்குப்பம் தலைவர் வேணு துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் இந்து முன்னணி தமிழ் மாநில நிர்வாக குழு உறுப்பினர் கண்ணன், விநாயகர் சதுர்த்தி பேரவை பொது செயலாளர் சனில்குமார், குமரகுரு உள்பட பலர் கலந்து கொண்டனர். விநாயகர் சிலைகள் நேருவீதி, மகாத்மாகாந்தி வீதி, பட்டேல் வீதி வழியாக மேளதாளம் முழங்க லாரி, டெம்போ, மாட்டு வண்டிகளில் கடற்கரை சாலை வரை ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டன. சாரத்தில் 21 அடி உயர மகா கணபதி விநாயகர் ராட்சத கிரேன் உதவியுடன் பழைய துறைமுகம் பகுதியில் கடலில் கரைக்கப்பட்டது. மற்ற சிறிய விநாயகர் சிலைகள் விசைப்படகில் மீனவர்கள் மூலம் கடலுக்குள் எடுத்து செல்லப்பட்டு சங்கமம் செய்யப்பட்டது. வீடுகளிருந்து பெறப்பட்ட 2000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறிய சிலை விநாயகர்களும் கரையோர அலையில் சங்கமிக்கப்பட்டன. கடற்கரை சாலையில் திரண்டிருந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் விநாயகர் சிலை ஊர்வலத்தை ஆர்வமுடன் கண்டு களித்தனர். விநாயகர் சிலை ஊர்வலத்தையொட்டி மாநிலம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். புதுச்சேரி போலீசில் மரைன் போலீஸ் பிரிவு இயங்குகிறது. இதற்காக அதிநவீன படகும் வாங்கி தரப்பட்டுள்ளது. ஆனால், விநாயகர் சிலை கடலில் கரைக்கப்பட்டபோது மரைன் பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபடவில்லை.