தெலுங்கானா: முடிவு எடுக்க பிரதமருக்கு நெருக்கடி நிலைமை மோசமாகும்: காங்., குழு எச்சரிக்கை
தெலுங்கானா: முடிவு எடுக்க பிரதமருக்கு நெருக்கடி நிலைமை மோசமாகும்: காங்., குழு எச்சரிக்கை
தெலுங்கானா: முடிவு எடுக்க பிரதமருக்கு நெருக்கடி நிலைமை மோசமாகும்: காங்., குழு எச்சரிக்கை

புதுடில்லி, : காங்கிரஸ் எம்.பி.,க்கள் ஆந்திர அமைச்சர்கள் அடங்கிய குழுவினர், பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்த போது, தெலுங்கானா விவகாரத்தில் ஒரு முடிவு எடுத்தே ஆக வேண்டும்.
'போராட்டத்தை விலக்கிக் கொள்ளுங்கள், பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணலாம்' என்று, பிரதமர் கேட்டுக் கொண்டார். ஆனால், சந்திரசேகர ராவ் தலைமையிலான போராட்டக் குழுவினரோ, அதை உறுதியாக மறுத்து விட்டனர். தெலுங்கானா தரப்படும் என்ற உறுதிமொழியைத் தவிர, வேறு எதுவும் வேண்டாம் என்று உறுதியாக, பிரதமரை போராட்டக் குழுவினர் கேட்டனர். அதற்கு பிரதமர், 'அதுபோன்ற உறுதிமொழியைத் தர இயலாது' என்று கூற, பதிலுக்கு எங்களால் போராட்டத்தை விலக்கிக் கொள்ள முடியாது, மாறாக, மேலும் போராட்டம் தீவிரமடையும் என்று கூறிவிட்டு வந்துவிட்டனர்.
இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி.,க்கள் ஆந்திர அமைச்சர்கள் அடங்கிய குழுவினர், பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து, மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடும் தொனியில் மனு ஒன்றை அளித்தனர். அதில் கூறப்பட்டுள்ள விவரம் இதுதான்: தெலுங்கானா போராட்டம் உண்மையில் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இது பற்றிய உண்மை விவரங்கள், முழுமையாக வெளியில் வரவில்லை. மக்களின் சாதாரண வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சாலை போக்குவரத்து தடைபட்டுள்ளது.
பள்ளிகள், கல்லூரிகள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் என, எல்லாமே மூடிக் கிடக்கின்றன. தெலுங்கானாவை உள்ளடக்கிய 14 மாவட்டங்கள் அனைத்துமே ஸ்தம்பித்துள்ளன. தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் எம்.பி.,க்கள் என எல்லாருமே, பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். தெலுங்கானா அமைச்சர்கள் யாருமே அலுவலகத்திற்குச் செல்வதில்லை. ஆந்திர மாநில அரசின் அமைச்சரவைக் கூட்டமே நடப்பதில்லை. அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்று 3 மாதங்கள் ஆகிவிட்டன. ஆந்திராவைச் சேர்ந்த அமைச்சர்கள் யாருமே, தெலுங்கானா பகுதிக்குள் அரசு முறை சுற்றுப்பயணம் கூட செய்ய முடியாத நிலை உள்ளது.
தெலுங்கானா தனி மாநிலம் கேட்டு, கடந்த ஒரு மாதத்தில் மட்டும், 630 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். 55 ஆண்டுகளாக இருக்கும் இந்த பிரச்னைக்கு, இதுவரை தீர்வு எட்டப்படவில்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைந்த முதல் தடவை, பொது செயல்திட்டம் உருவாக்கப்பட்டது. அதில், தெலுங்கானா வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. அடுத்தடுத்த ஜனாதிபதி உரைகளிலும்கூட, தெலுங்கானா வழங்குவதற்கு உறுதி கூறப்பட்டது. 2001ம் ஆண்டு காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில், தெலுங்கானா குறித்து கூறப்பட்டிருந்தது.
கடந்த 2009ம் ஆண்டு டிசம்பர் 9ம் தேதி அன்று, அப்போதைய உள்துறை அமைச்சர் சிதம்பரம்,தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்படும் என அறிவிப்பே செய்தார். இவ்வளவு தூரம் உறுதிமொழிகளை அளித்துவிட்டு, தெலுங்கானா வழங்குவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தெலுங்கானா பகுதிக்கு தினந்தோறும் 8 மணி நேரம் மின்தடை ஏற்படுத்தப்படுகிறது. இதன் மூலம், போராட்டத்திற்கு எதிராக விவசாயிகளை திருப்பி விடலாம் என்ற உள்நோக்கம் உள்ளது. சிருங்கேணி நிலக்கரி சுரங்கத்தில் முற்றிலுமாக வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால், பெரிதும் பாதிப்புகள் ஏற்பட்ட வண்ணம் உள்ளன.
தெலுங்கானா பகுதி அரசு ஊழியர்களை, மாநில அரசு மிகவும் கீழ்த்தரமாக நடத்துகிறது. தொழிலாளர் சங்கத் தலைவர்களை அழைத்து மிரட்டுகின்றனர்; சம்பளம் நிறுத்தப்பட்டுள்ளது. ஏனைய சலுகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அவர்களின் அன்றாட வாழ்க்கையே கேள்விக்குறியாக உள்ளது. இவ்வளவு தூரம் நிலைமை மோசமாக உள்ளது. ஆனாலும், மாநில அரசாங்கமும் மத்திய அரசாங்கமும் மவுனமாக இருப்பது, அங்குள்ள மக்களின் உணர்வுகளை காயப்படுத்துவதாக உள்ளது. பற்றியெரியும் நிலையில் உள்ள இப்பிரச்னையில், உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும். இல்லையெனில், மக்களின் கோபம் கட்டுக்கடங்காமல் போய், விபரீதமான நிலைமையை சந்திக்கப் போவது நிச்சயம் என்று, அந்த மனுவில் மிகவும் வெளிப்படையாகவே எச்சரிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடும், ஜி.டி.,யும் பாதிக்கப்படலாம் : மத்திய அரசு தரப்பில் வாக்குறுதி தரப்படாத நிலையில், உடனடியாக ஐதராபாத்திற்கு நேற்று முன்தினம் இரவே திரும்பி, தங்களது போராட்டத்தை வலுப்படுத்த முடிவு செய்ய, தீவிர ஆலோசனைகளில் போராட்டக் குழுவினர் உள்ளனர். அதன் ஒருகட்டமாக, ரயில்களை இயங்கவிடாமல் செய்வது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழகம், கேரளா என, தெற்கே உள்ள மாநிலங்களில் இருந்து ஆந்திராவை கடந்து, வட மாநிலங்களுக்குச் செல்லும் ரயில்களை முற்றிலுமாக மறித்து விடுவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனால், சென்னையில் இருந்து வடமாநிலங்களுக்கு இயக்கப்படும் பல ரயில்களின் போக்குவரத்து பாதிக்கப்படுமெனத் தெரிகிறது. குறிப்பாக, டில்லிக்கு தினந்தோறும் சென்னையில் இருந்து கிளம்பும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் மற்றும் ஜி.டி., எக்ஸ்பிரஸ் ரயில்களின் போக்குவரத்து கடுமையாக பாதிக்கபடும் என்ற நிலை உருவாகியுள்ளது. தசரா பண்டிகை முடிந்ததும், அடுத்த நாளில் இருந்து மூன்று நாட்களுக்கு, இதுபோன்ற ரயில் மறியல் போராட்டம் செய்யப்படவுள்ளது.
ராம்விலாஸ் பஸ்வான் பார்லிமென்ட் நிலைக் குழு உறுப்பினர் லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் : லோக்பால் மசோதா தொடர்பாக இறுதி முடிவு எடுக்கும் பொறுப்பு, பார்லிமென்ட் நிலைக்குழு வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அனைத்து கட்சிகள், அமைப்புகளின் கருத்துக்களை கேட்டபின், லோக்பால் விவகாரம் தொடர்பாக, பார்லிமென்ட் நிலைக் குழு, ஏகமனதாக முடிவை அறிவிக்கும். தங்களால் தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் சரியாக செயல்படவில்லை என்றால், அவர்களை பதவியில் இருந்து திரும்ப பெறும் உரிமை, வாக்காளர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என, அன்னா ஹசாரே கூறுவது, நடைமுறைக்கு ஏற்றது அல்ல. முதலில் அவர், தன் அமைப்பை அரசியல் கட்சியாக மாற்றி, உண்மை நிலவரம் என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அதன் பின், இதுபோன்ற அறிக்கைகளை அவர் விடலாம்.


