/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் : அமைச்சர் முனுசாமி அழைப்புஅனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் : அமைச்சர் முனுசாமி அழைப்பு
அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் : அமைச்சர் முனுசாமி அழைப்பு
அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் : அமைச்சர் முனுசாமி அழைப்பு
அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் : அமைச்சர் முனுசாமி அழைப்பு
ADDED : ஆக 28, 2011 01:11 AM
திருநெல்வேலி : இந்தியாவில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றும் தமிழக முதல்வரின் எண்ணத்தை நிறைவேற்ற அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று உள்ளாட்சி துற அமைச்சர் முனுசாமி தெரிவித்தார்.
நெல்லையில் நடந்த குடிநீர் மேம்பாட்டு திட்ட ஆய்வு பணிகள் கூட்டத்தில் உள்ளாட்சி துறை அமைச்சர் முனுசாமி தெரிவித்ததாவது:
பஞ்., பகுதிகளில் 10 அல்லது 20 வீடுகள் கொண்ட பகுதிக்கு குடிநீர் கிடைக்க தமிழக முதல்வர் சிறப்பான திட்டத்தை 1994ம் ஆண்டு ஏற்படுத்தியுள்ளார்.
அதன் அடிப்படையில் சிறு குடியிருப்புகளுக்கு கூட குடிநீர் தட்டுப்பாடு இன்றி நிரந்தரமாக கிடைத்திட தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப் வேண்டும். நெல்லை மாவட்டத்தில் பஞ்.,யூனியன்கள், பஞ்., பகுதிகளில் உள்ள 700 கி.மீ நீளமுள்ள மண் மற்றும் ஜல்லி சாலைகளை தரமான தார் சாலைகளாக மாற்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். பஞ்., பகுதிகளில் அமைக்கப்படும் சாலைகள் நெடுஞ்சாலைகளுக்கு இணையான தரத்தை கொண்ட சாலைகளாக அமைக்க வேண்டும்.
பிரதமர் சாலை திட்டத்தின் கீழ் 500 பேர் கொண்ட குடியிருப்புகளுக்கு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது 250 பேர் கொண்ட குடியிருப்புகளுக்கும் சாலைகள் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் கடிதம் அனுப்பியுள்ளார். ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட சாலைகள் வரும் செப்டம்பர் மாதம் 31ம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும்.
தமிழக முதல்வரின் சிறப்பான திட்டமான மகளிருக்கான கழிப்பறை மற்றும் குளிப்பறை கட்டும் திட்டத்தை விரைவுபடுத்தி 3 மாதங்களுக்குள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பஞ்.,யூனியன் மற்றும் பஞ்., பகுதிகளில் உள்ள ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தேவையான கழிப்பறைகள் உள்ளதா என்பதை கணக்கெடுக்க வேண்டும்.
மேலும், மாணவ, மாணவிகளுக்கு தேவையான பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதுடன் இவர்களுக்கு தனித்தனி கழிப்பிட வசதிகள் உள்ளதா என்பதையும், பள்ளி கட்டடத்தின் தரம், சுற்றுசுவர் உள்ளதா என்பதை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். பள்ளிகளில் வழங்கப்படும் சத்துணவு தரமான முறையில் வழங்கப்பட வேண்டும்.
எம்.பிக்கள், எம்.எல்.ஏக்களை, பி.டி.ஓக்கள் சந்தித்து கல்வி தொடர்பான திட்டங்களை நிறைவேற்ற அதிக நிதியை பெற்று கல்வியின் தரத்தை உயர்த்த தமிழக முதல்வரின் தலைமையிலான அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். கிராமங்கள், டவுன் பஞ்.,கள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் உள்ள சத்துணவு, அங்கன்வாடி மையங்களை சுகாதாரமாக வைக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
இதன் அடிப்படையில் அனைத்து பகுதிகளிலும் உள்ள சத்துணவு மற்றும் அங்கன்வாடி மைய கட்டடங்கள் சொந்த கட்டங்களில் இயங்குகிறதா, அவற்றின் நிலை, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறதா, ஆரோக்கியமாக உள்ளதா, சத்துணவு, அங்கன்வாடி மையங்கள் கட்டுவதற்கு இடம் உள்ளதா என்பதை உடனடியாக அனைத்து பி.டி.ஓக்களும் ஒருங்கிணைந்து ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
சுனாமி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளை விரைவாக கட்டி முடித்து வரும் டிசம்பர் மாதத்திற்குள் புதிய பயனாளிகளுக்கு வழங்க வேண்டும். அப்பகுதிகளில் நடந்து வரும் மீதமுள்ள சாலை பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும். தமிழக முதல்வரின் மழை நீர் சேகரிப்பு திட்டத்தை அனைத்து அலுவலர்களும் தீவிரமாக செயல்படுத்தி நிலத்தடி நீர் உயரவும், குடிநீர் பாதுகாக்கவும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
அரசு அலுவலர்கள் மக்கள் பிரதிநிதிகளுடனும், மாவட்ட கலெக்டருடனும் கலந்து ஆலோசித்து கருத்துக்களை பரிமாறி தமிழக முதல்வரின் எண்ணமான இந்தியாவில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றிட வேண்டும் என்பதற்கு ஏற்ப அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.
இதில் கலெக்டர் செல்வராஜ், எம்.எல்.ஏக்கள் நயினார் நாகேந்திரன், ராஜேந்திரன், டாக்டர் துரையப்பா, நாராயணன், திட்ட அலுவலர் அமானுல்லா, நகராட்சிகளின் மண்டல நிர்வாக இயக்குனர் மோகன், குடிநீர் வடிகால் வாரிய தலைமை இன்ஜினியர் கோதண்ட ராமன், கண்காணிப்பு இன்ஜினியர் ரவீந்திரன், ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, குடிநீர் திட்ட பணிகளை ஆய்வு செய்ய உள்ளாட்சி துறை அமைச்சர் முனுசாமி நெல்லைக்கு நேற்று காலையில் வந்தார். தொடர்ந்து பெருமாள்புரத்தில் கூடுதல் குடிநீர் சப்ளை செய்வதற்காக கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பணிகளையும் அமைச்சர் ஆய்வு செய்தார்.


