ADDED : ஜூலை 15, 2011 12:52 AM
திருச்செங்கோடு: திருச்செங்கோடு நகராட்சி 14வது வார்டு, ராஜாகவுண்டம்பாளையத்தை சேர்ந்த பெண்கள், குடிநீர் கேட்டு ஈரோடு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
திருச்செங்கோடு நகராட்சி 14வது வார்டு, ராஜாகவுண்டம்பாளையத்தில் விசைத்தறி கூலித் தொழிலாளர்கள் அதிகம் உள்ளனர். அப்பகுதிக்கு குடிநீர் சரியாக வினியோகப்படவில்லை. அதுபோல், சுகாதார வசதிகளும் செய்யப்படவில்லை. அதுகுறித்து, மக்கள் பலமுறை புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பொருமையிழந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், நேற்று காலை 11.30 மணியளவில் காலி குடங்களுடன், ஈரோடு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) ரவி, போலீஸ் எஸ்.ஐ., ராமதாஸ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மாலைக்குள் சீரான குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தனர். அதையடுத்து, மக்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால், அரைமணி நேரம் போக்குவரத்து பாதித்தது.