
அரசு பள்ளியை ஆட்டிப்படைக்கும் ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் மனைவி! ''ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் மனைவி, ஆசிரியர்களை ஆட்டிப்படைச்சிட்டு இருக்காங்க பா...!'' என, பேச ஆரம்பித்தார் அன்வர்பாய்.
''விளக்கமா சொல்லுங்க...'' என்றார் அந்தோணிசாமி.
''தமிழகத்துல, எந்த துறையில இருந்தாலும் திறமையா செயல்படக் கூடியவர்னு, ஒரு மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிக்கு நல்ல பெயர் இருக்கு பா...
''இவரோட மனைவி, சென்னையில அரசு மேல்நிலைப் பள்ளியில முதுகலை ஆசிரியரா வேலை பார்த்துட்டு இருக்காங்க பா... கணவர் ஐ.ஏ.எஸ்., அதிகாரிங்கறதை சொல்லிச் சொல்லி, பள்ளியில வேலை பார்க்கற எல்லா ஆசிரியர்களையும் ஆட்டிப்படைச்சிட்டு இருக்காராம்... தான் சொல்றதைத்தான் ஆசிரியர்கள் கேட்கணும்னு மிரட்டறாங்களாம்... ஆசிரியர்கள் எல்லாம் புலம்பிட்டு இருக்காங்க...'' என்றார் அன்வர்பாய்.
''வசூல் விவகாரம் தலைமைக்கு தெரிஞ்சிட்டதால, மாவட்ட செயலர் பதவியை ராஜினாமா செஞ்சிருக்காரு வே...'' என, அடுத்த மேட்டருக்கு மாறினார் பெரியசாமி அண்ணாச்சி.
''எந்த கட்சி விவகாரம் ஓய்...'' என்று கேட்டார் குப்பண்ணா.
''தி.மு.க.,வுல, பல மாவட்ட செயலர்கள் மேல புகார்கள் குவிஞ்சிட்டு இருக்கு வே... அந்த புகார்களை விசாரிச்சு, உடனடி நடவடிக்கை எடுக்க, கட்சித் தலைமையும் உத்தரவிட்டுருக்கு... சமீபத்துல, திருவள்ளூர் மாவட்ட செயலர் சிவாஜி மேல பல புகார்கள் வந்திருக்கு... தேர்தல்ல, 'சீட்' வாங்கித் தர்றேன்னு சொல்லி, பல பேர்கிட்ட பல, 'லகரங்களை' வசூல் செஞ்சதா, கட்சியினர் புகார் செஞ்சிருக்காங்க...
''இதைப்பத்தி விசாரிச்சதுல, புகார்கள் உண்மைதான்னு, தலைமைக்கு தெரிஞ்சது... உடனே, வலுக்கட்டாயமா ராஜினாமா கடிதத்தை எழுதி வாங்கியிருக்காங்க... இந்த மாதிரி வசூல் விவகாரத்துல சிக்கியிருக்கற மற்ற மாவட்ட செயலர்களுக்கும் சீக்கிரத்துல பதவி பறிபோகும்னு பேச்சு அடிபடுது வே...'' என்றார் அண்ணாச்சி.
''படம் இருந்ததால, புது காலண்டர் அச்சடிச்சிருக்காங்க...'' என, கடைசி தகவலுக்கு மாறினார் அந்தோணிசாமி.
''இப்ப எதுக்கு புது காலண்டர் அச்சடிக்கறாங்க பா...'' என்று கேட்டார் அன்வர்பாய்.
''தமிழக அரசு காலண்டர்களை தான், அரசு அலுவலகங்கள்ல மாட்டி வைப்பாங்க... இந்த வருஷம் ஜனவரி மாசம், இந்த ஆண்டுக்கான காலண்டரை அச்சடிச்சாங்க... அதுல, அப்போதைய முதல்வர் கருணாநிதி படம், ஒவ்வொரு மாசத்திலும் இருந்தது... ஆட்சி மாற்றம் நடந்ததும், அந்த காலண்டர்களை எல்லா அலுவலகத்திலும் எடுத்துட்டாங்க...
''முதல்வர் படம் போட்ட புது காலண்டரை அச்சடிச்சிருக்காங்க... ஆறு மாசத்துக்கு மட்டும் அச்சடிச்சிருக்கற இந்த காலண்டரை, எல்லா அரசு அலுவலகங்களுக்கும் சப்ளை செஞ்சிட்டு இருக்காங்க...'' எனக் கூறிவிட்டு, அந்தோணிசாமி புறப்பட, மற்ற பெரியவர்களும் நடையைக் கட்டினர்; பெஞ்ச் அமைதியானது.