/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/போலீசாரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்; பஸ் சிறைபிடிப்பு : கூடன்குளத்தில் பரபரப்புபோலீசாரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்; பஸ் சிறைபிடிப்பு : கூடன்குளத்தில் பரபரப்பு
போலீசாரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்; பஸ் சிறைபிடிப்பு : கூடன்குளத்தில் பரபரப்பு
போலீசாரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்; பஸ் சிறைபிடிப்பு : கூடன்குளத்தில் பரபரப்பு
போலீசாரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்; பஸ் சிறைபிடிப்பு : கூடன்குளத்தில் பரபரப்பு
வள்ளியூர் : கூடன்குளத்தில் பொய் வழக்கு போட்டு கைது செய்தவர்களை உடனே விடுதலை செய்யக்கோரி போலீசாரை கண்டித்து 300 பெண்கள் உட்பட 500 பேர் அரசு பஸ்சை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அணு உலையினால் ஆபத்து என்றும், பொதுமக்கள் இடமாற்றம் செய்யப்படுவார்கள் என்றும் பயந்து கூடன்குளம் சுற்று கிராம பொதுமக்கள் கூடன்குளம் அணு உலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அதன்படி கடந்த மாதம் கூடன்குளம் இடிந்தகரையில் உண்ணாவிரத போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின் போராட்டம் நடத்தியவர்களுடன் ஒரு குழு அமைத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தி தற்காலிகமாக போராட்டத்தை தடுத்து நிறுத்தினர்.
இந்நிலையில் மீண்டும் கூடன்குளம் அணு உலையை மூட வலியுறுத்தி இன்று (11ம் தேதி) இடிந்தகரையில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த மீனவ கிராம பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதற்கு போலீசார் முறையான அனுமதி வழங்கவில்லை. ஆனால் அணுஉலை எதிர்ப்பாளர்கள் போலீஸ் தடையை மீறி உண்ணாவிரத போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்து பொதுமக்களை திரட்டி வந்தனர்.
இதனையறிந்த போலீசார் நேற்று முன்தினம் கூடன்குளத்தை சேர்ந்த கணேசன், ரவி, மணிகண்டபிரபு, ராஜன் ஆகிய நான்கு பேரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தனர். மேலும் நேற்று கூடன்குளத்தை சேர்ந்த லிங்கம் என்பவரை விசாரணைக்காக போலீசார் அழைத்து சென்றுள்ளனர். இதனையறிந்த கூடன்குளம் பொதுமக்கள் சுமார் 300 பெண்கள் உட்பட 500 பேர் ஒன்று திரண்டு அந்த வழியாக சென்ற 2 அரசு பஸ்களை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
உடனே சம்பவ இடத்திற்கு கூடன்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன் தலைமையில் போலீசார் சென்று சாலை மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதற்கு எதிர்ப்பாளர்கள் பொய் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும், கைது செய்தவர்களை விடுதலை செய்ய வேண்டும், உண்ணாவிரதத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர். அதற்கு போலீஸ் தரப்பில் சரியான பதில் கூறாததால் சாலை மறியல் போராட்டம் தொடர்ந்தது. இதனால் கூடன்குளம் கீழ பஜாரில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
உடனே போலீசார் போக்குவரத்தை பைபாஸ் ரோட்டின் வழியாக திருப்பி விட்டனர். இந்நிலையில் போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த சேரன்மகாதேவி ஆர்.டி.ஓ. கருணாகரன் சம்பவ இடத்திற்கு வந்தார். அப்போது அவர் சாலை மறியல் செய்தவர்களுடன் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டுவிட்டு சுமூகமாக பேச்சுவார்த்தை நடத்த 10 பேர் கொண்ட குழு அமைத்து பேச்சுவார்த்தைக்கு வரும்படி வேண்டுகோள் விடுத்தார்.
அதனையேற்று சாலை மறியல் செய்தவர்கள் சிறைபிடித்த பஸ்களை விடுவித்து சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். பின் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு ஆர்.டி.ஓ. தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நிலை நீடித்து வந்ததால் சுமூக நிலை ஏற்படாமல் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்தது. சாலை மறியல் சம்பவத்தால் 3 மணி முதல் இரவு 8 மணி வரை கூடன்குளம் மெயின் பஜாரில் போக்குவரத்து தடைபட்டு காணப்பட்டது. இச்சம்பவம் கூடன்குளம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.