போராட்டம் நடத்தப் போவதாக "டாஸ்மாக்' ஊழியர்கள் எச்சரிக்கை
போராட்டம் நடத்தப் போவதாக "டாஸ்மாக்' ஊழியர்கள் எச்சரிக்கை
போராட்டம் நடத்தப் போவதாக "டாஸ்மாக்' ஊழியர்கள் எச்சரிக்கை
சேலம் : தமிழக, 'டாஸ்மாக்' கடைகளின் மதுபானங்களின், புதிய விலை பட்டியலை தாமதமாக வெளியிட்ட அதிகாரிகள், நேற்று முன்தினம் காலையில் நடந்த விற்பனைக்கும், பணம் செலுத்த கட்டாயப்படுத்துவதால், ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அரசு ஏற்ற பின், முதல் முறையாக, 2009 அக்., 1ம் தேதி, விலை ஏற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில், மதுபான தயாரிப்பு நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்று, நேற்று முன்தினம் முதல், மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டது.
நேற்று முன்தினம், விலை உயர்வு குறித்த செய்தி, பத்திரிகையில் மட்டுமே வெளிவந்திருந்தது. நேற்று முன்தினம் காலையில் விற்பனையாளர்களுக்கு, எவ்வித தகவலும் தெரிவிக்காததால், அவர்கள் வழக்கம் போல், விற்பனையில் ஈடுபட்டனர். காலை 11 மணிக்கு, சென்னை, 'டாஸ்மாக்' தலைமை அலுவலகத்தில் இருந்து, விலை உயர்வு பட்டியல், மாவட்ட மேலாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர்களும் உடனடியாக இந்த அறிவிப்பு குறித்து, விற்பனையாளர்களுக்கு தெரிவிக்கவில்லை. மாலை, 3 மணிக்கே சூப்பர்வைசர்களுக்கு, எஸ்.எம்.எஸ்., மூலம் அழைப்பு விடுக்கப்பட்டது.
ஒரு சில கடைகளில் மட்டுமே, பாட்டில்களுக்கு, 10 ரூபாய் முதல், 50 ரூபாய் வரை விலை ஏற்றம் செய்யப்பட்டு, விற்பனை செய்யப்பட்டது. சூப்பர்வைசர்கள், விலை பட்டியலை, மாலை 5 மணிக்கே, கடைகளுக்கு தெரியப்படுத்தினர். அந்த பட்டியலுடன் அனுப்பிய சுற்றறிக்கையில், காலை முதல் விலையேற்றம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இது, விற்பனையாளர்கள் மத்தியில், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காலை முதல் பழைய விலைக்கு விற்பனை செய்ததால், கடை ஒன்றுக்கு, 2,000 ரூபாய் முதல், 14 ஆயிரம் ரூபாய் வரை, விற்பனையாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டது.
'இந்த விற்பனை இழப்பை விற்பனையாளர்களே ஏற்றுக் கொள்ள வேண்டும்' என, 'டாஸ்மாக்' நிர்வாகம் தெரிவித்தது. இதனால், அதிர்ச்சியடைந்த, 'டாஸ்மாக்' ஊழியர்கள், சம்மேளனத்தின் மாநில துணைப் பொதுச் செயலர் திருச்செல்வன் தலைமையில் நிர்வாகிகள் நேற்று, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை கமிஷனர் மத்துவானி, சில்லறை விற்பனை பொது மேலாளர் கணேசன் ஆகியோரை நேரில் சந்தித்து, புகார் தெரிவித்தனர். 'டாஸ்மாக்' ஊழியர்கள் சம்மேளனத்தின் கோரிக்கை ஏற்க, அதிகாரிகள் மறுத்து விட்டனர்.
'டாஸ்மாக்' ஊழியர்கள் சம்மேளனத்தின் மாநில பொதுச் செயலர் கணேசன் கூறியதாவது: காலை, 10 மணி முதல் விற்பனை செய்த பாட்டில்களுக்கும், புதிய விலை பட்டியல்படி, பணம் செலுத்த கூறுகின்றனர். இதனால், விற்பனையாளர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். இது குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டு பலன் இல்லை. விரைவில், முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்வோம். அதற்கு முன்பாக, இன்னும் இரண்டு நாளில் மாநில நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டி, அதிகாரிகளின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், போராட்டம் மேற்கொள்ளப்படும். இவ்வாறு கணேசன் கூறினார்.