/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/"அருகாமையில் காவல்' திட்டம் கோவையில் துவக்கம்"அருகாமையில் காவல்' திட்டம் கோவையில் துவக்கம்
"அருகாமையில் காவல்' திட்டம் கோவையில் துவக்கம்
"அருகாமையில் காவல்' திட்டம் கோவையில் துவக்கம்
"அருகாமையில் காவல்' திட்டம் கோவையில் துவக்கம்
UPDATED : ஆக 26, 2011 02:35 AM
ADDED : ஆக 25, 2011 11:36 PM
கோவை : இந்தியாவில் முதல் முறையாக, 'அருகாமையில் காவல்' என்ற புதிய திட்டம், கோவை மாநகர போலீஸ் சார்பில் நேற்று தொடங்கப்பட்டது.
கோவை மாநகர போலீஸ் சார்பில், 'அருகாமையில் காவல்' என்ற புதிய திட்டத்தின் தொடக்க விழா, அவிநாசி ரோடு போலீஸ் சமுதாயக்கூடத்தில் நேற்று நடந்தது. சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர் ஹேமா வரவேற்றார். போலீஸ் கமிஷனர் அமரேஷ் புஜாரி பேசியதாவது: தமிழக போலீஸ் வரலாற்றில், ஒரு புதிய அத்தியாயமாக, 'அருகாமையில் காவல்' என்ற பெயரிலான புதுமையான திட்டம், கோவையில் இன்று தொடங்குகிறது. மேலைநாடுகளில் அமலில் இருக்கும் இத்திட்டம், இந்தியாவில் இங்கு தான் முதல் முறையாக செயல்படுத்தப்படுகிறது. 'டாக்டர், வக்கீல், போலீஸ் ஆகியோரில், யாரை அதிகம் நம்புகிறீர்கள்' என்று வெளிநாடுகளில் சர்வே செய்தால், 'போலீஸ்' என்று தான் அதிகம் பேர் கூறுவர். ஆனால், நம் நாட்டில் அப்படிப்பட்ட நிலையில்லை. காரணம், போலீசை யாரும் நம்பாத நிலை உள்ளது. போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே நெருக்கம் இல்லை; இருவருக்கும் பெரிய இடைவெளி உள்ளது. பொதுமக்கள் ஒத்துழைப்பு கிடைத்தால், போலீசாரின் பணி எளிதாகும். 'அருகாமையில் காவல்' திட்டத்தின் நோக்கம், பொதுமக்களுடன் போலீசார் நெருங்கிப்பணியாற்றுவது தான். இத்திட்டம், வெற்றி பெற்றால் மக்களுக்கு லாபம்; பொதுமக்கள் மத்தியில் போலீசாரின் மதிப்பு உயரும். இவ்வாறு, கமிஷனர் அமரேஷ் புஜாரி பேசினார். திட்டத்தை தொடங்கி வைத்தும், அடையாள அட்டை மற்றும் கையேடுகளை போலீஸ் அதிகாரிகளுக்கு வழங்கியும், கலெக்டர் கருணாகரன் பேசுகையில், ''போலீஸ் பணி சிறப்பானதாக இருக்க வேண்டுமெனில், அதிகப்படியான தகவல்கள் சேகரிக்க வேண்டும். தகவல் சொல்பவர், அருகிலேயே இருக்க வேண்டும். அவருக்கும், போலீசுக்கும் நல்லுறவு இருக்க வேண்டும். தகவல்கள் முழுமையாக சேகரிக்கப்பட்டால் தான், தவறுகள் நடப்பதை தடுக்க முடியும். இந்த திட்டத்தின் பயன்கள் முழுமையாக மக்களை சென்றடைய போலீசார் பாடுபட வேண்டும்,'' என்றார். நிகழ்ச்சியில், 'இஜீஸ் குளோபல் அகாடமி' ஆலோசகர் சந்திரசேகரன், 'மாஸ்டர் மைன்ட் சொல்யூசன்ஸ்' நிறுவனத்தின் கவிதா, ரூட்ஸ் நிறுவன இயக்குனர் கவிதாசன் ஆகியோர், போலீஸ்-பொதுமக்கள் இடையிலான உறவு பற்றிப்பேசினர். துணை கமிஷனர் (குற்றம் மற்றும் போக்குவரத்து) செந்தில் குமார் நன்றி கூறினார். திட்டம் செயல்படுவது எப்படி? 'அருகாமையில் காவல்' திட்டத்தின்படி, ஒரு ஸ்டேஷனுக்கு பத்து குழுவினர் என்ற வீதத்தில், 15 ஸ்டேஷன்களிலும் 150 குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு குழுவுக்கும், எஸ்.ஐ., அல்லது எஸ்.எஸ்.ஐ., தலைமை வகிப்பார். ஒரு ஸ்டேஷனுக்கு உட்பட்ட 10 குழுவினரும், அந்தந்த ஸ்டேஷன் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் தலைமையில் செயல்படுவர். 'அருகாமையில் காவல்' குழுவினர், தினமும் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட பகுதிக்கு சென்று பொதுமக்களிடம் குறை கேட்டறிய வேண்டும். மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில், முக்கிய சந்திப்பு, பள்ளி, கல்லூரிகளில், 'அருகாமையில் காவல்' போலீசாரின் பெயர், மொபைல் எண் குறிப்பிட்டு பலகைகள் வைக்கப்படும். தினமும் பொதுமக்களை சந்தித்து குறை கேட்பதன் மூலம் அவர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள முடியும். குடும்பப்பிரச்னை, கடன், ரவுடிகள் தொல்லை, புதிய நபர் நடமாட்டம், இரவு நேரங்களில் ஏற்படும் பிரச்னை, குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட அனைத்து பிரச்னைகள் குறித்தும், 'அருகாமையில் காவல்' குழுவினரிடம் புகார் தெரிவிக்கலாம். அவை, உடனுக்குடன் தீர்க்கப்படும்.
அந்தந்த பகுதிகளில் உள்ள குடியிருப்பு நலச்சங்கத்தினர், தொழிற்சங்கத்தினர் மற்றும் முக்கிய நபர்களிடம், 'அருகாமையில் காவல்' குழுவினரின் மொபைல் எண் வழங்கப்படும். இந்த குழுவினர், பொதுமக்களிடம் குறை கேட்பதை, உதவி கமிஷனர்களும், இன்ஸ்பெக்டர்களும் கண்காணிப்பர். குழுவினரின் செயல்பாடு குறித்து, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தனியார் மூலம் சர்வே எடுக்கப்படும். சிறப்பான செயல்பாடுகளை கொண்ட, முதல் ஐந்து இடங்களை பிடிக்கும் குழுவினருக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்படும். 'இந்த திட்டம் மூலம், கோவை மாநகரில் குற்றங்கள் குறையும்' என்று, போலீஸ் கமிஷனர் அமரேஷ் புஜாரி நம்பிக்கை தெரிவித்தார்.