தங்க கடத்தலில் அரசு ஊழியர்கள் தொடர்பு: சி.பி.ஐ., விசாரணையை துவக்கியது
தங்க கடத்தலில் அரசு ஊழியர்கள் தொடர்பு: சி.பி.ஐ., விசாரணையை துவக்கியது
தங்க கடத்தலில் அரசு ஊழியர்கள் தொடர்பு: சி.பி.ஐ., விசாரணையை துவக்கியது
ADDED : மார் 14, 2025 04:10 AM

புதுடில்லி: துபாயில் இருந்து நம் நாட்டுக்குள் தங்கம் கடத்தி வரப்படும் விவகாரத்தில், அரசு ஊழியர்களுக்கு இருக்கும் தொடர்பு குறித்து சி.பி.ஐ., விசாரணையை துவக்கி உள்ளது.
தொடர்கதை
மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து, நம் நாட்டுக்கு சட்டவிரோதமாக தங்கம் கடத்தி வரப்படுவது தொடர்கதையாக உள்ளது.
சமீபத்தில், துபாயில் இருந்து, 19 கோடி ரூபாய் மதிப்பிலான, 21.28 கிலோ தங்கம் கடத்தி வந்த ஓமன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்சை சேர்ந்த இருவர், மும்பை விமான நிலையத்தில் கடந்த 6ம் தேதி பிடிபட்டனர். இவர்களும், அடிக்கடி துபாயில் இருந்து மும்பை பயணித்தது தெரியவந்தது.
விசாரணை
இதுபோல துபாயில் இருந்து அதிக அளவிலான தங்கம் கடத்தி வரப்படும் விவகாரத்தில் சர்வதேச கடத்தல் கும்பலின் பங்கு இருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்பி உள்ளது.
விமான நிலையங்களில் பணியாற்றும் மத்திய அரசு ஊழியர்களின் உதவியின்றி இதுபோன்ற தொடர் கடத்தல்கள் சாத்தியமில்லை என்பதால், அதுகுறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்த வருவாய் புலனாய்வுத் துறை பரிந்துரைத்தது. இதையடுத்து, அடையாளம் தெரியாத அரசு ஊழியர்கள், தனிநபர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ள சி.பி.ஐ., விசாரணையை துவக்கி உள்ளது.