மின் திருட்டை தடுக்க 400 ராணுவ வீரர்கள் கொண்ட 80 தனிப்படை : தமிழக மின்வாரியம் அதிரடி நடவடிக்கை
மின் திருட்டை தடுக்க 400 ராணுவ வீரர்கள் கொண்ட 80 தனிப்படை : தமிழக மின்வாரியம் அதிரடி நடவடிக்கை
மின் திருட்டை தடுக்க 400 ராணுவ வீரர்கள் கொண்ட 80 தனிப்படை : தமிழக மின்வாரியம் அதிரடி நடவடிக்கை
சென்னை : தமிழகத்தில் மின் திருட்டை தடுக்கவும், கண்டுபிடிக்கவும், 80 தனிப்படைகள் அமைக்க, தமிழக மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையில், 45 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் இருக்கும் மின்வாரியம், கடனை அடைத்து மீண்டும், வருவாய் தரக்கூடிய நிறுவனமாக மாற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 'கடனில் இருக்கும் மின் வாரியத்தை சீரமைக்கும் வகையில், மின் திருட்டை தடுக்க, சிறப்புப் படை அமைக்கவும், பகிர்மானத்தின் போது ஏற்படும் மின் இழப்பு அளவை குறைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தமிழ்நாடு மின்வாரிய ஜனதா தொழிலாளர் சங்கம் உட்பட சில சங்கங்கள், அமைச்சர் நத்தம் விஸ்வநாதனிடம் மனு கொடுத்தன.
அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையிலும், 'மின்சார பாதுகாப்புப் படை அமைக்கப்படும்' என, அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தமிழக மின்வாரியத்தின், 14வது கூட்டம், கடந்த, 25ம் தேதி, மின்வாரிய அலுவலகத்தில் நடந்தது. சேர்மன் ஹன்ஸ்ராஜ் வர்மா தலைமையிலான கூட்டத்தில், செயலர், இயக்குனர்கள் உட்பட, வாரிய உறுப்பினர்கள் பங்கேற்றனர். இதில், தமிழ்நாடு ஜனதா தொழிலாளர் சங்கம் கொடுத்த மனுவில் உள்ள கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு, முக்கிய முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, தமிழகம் முழுவதும் மின் திருட்டைத் தடுக்க, ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களை கொண்ட, 80 தனிப்படைகள் அமைக்க உத்தரவிடப்பட்டது.
இதுகுறித்து, மின்வாரியம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில், ஏற்கனவே மின் திருட்டை தடுக்க, 18 பறக்கும் படைகள் உள்ளன. ஆனாலும், தொடரும் மின் திருட்டை தடுக்கும் வகையில், தமிழகம் முழுவதும், 40 வட்டங்களில், ஒரு மேற்பார்வையாளர் தலைமையில், முன்னாள் ராணுவ வீரர்கள் ஐந்து பேர் கொண்ட, 80 பறக்கும் படைகள் அமைக்கப்படும். ஒரு வட்டத்திற்கு, இரண்டு பறக்கும் படைகள் வீதம் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர்.
அனைத்து தனிப்படையினரும், தங்கள் பகுதி பறக்கும்படை செயற்பொறியாளர் அல்லது உதவிப்பொறியாளர் தலைமையில் செயல்படுவர். இந்த பறக்கும் படைக்கான பணியாளர்கள், தமிழ்நாடு ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் நலக்கழகம் (டெக்ஸ்கோ) மூலம் நியமிக்கப்பட உள்ளனர். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது தமிழக மின்வாரியத்திற்கு பேரிழப்பாக மின் திருட்டு உள்ளதால், அதை தடுக்க தமிழக அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கைகளால், மின்வாரிய தொழிலாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
நமது சிறப்பு நிருபர்