PUBLISHED ON : ஜூலை 13, 2011 12:00 AM

அய்யோ பாவம்... : அ.சேகர், சிதம்பரத்திலிருந்து எழுதுகிறார்: பத்திரிகை சுதந்திரம் என்பது, ஒரு ஜனநாயக நாட்டில், மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கும் வல்லமை படைத்தது. இன்று நம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கும், '2ஜி' ஊழலை, ஒவ்வொரு சாதாரண குடிமகனும் அறிந்து கொள்ளும் வகையில், செய்திகளை வெளியிட்டு, அதுவே தமிழக அரசியலில், மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கியது.இதனால் பாதிக்கப்பட்ட தி.மு.க., தலைவர் கருணாநிதி, மனம் வெறுத்து, இந்தியாவில், ஊடகங்களின் ஆட்சி நடப்பதாகக் கூறியுள்ளது, 'அய்யோ பாவம்' என்று சொல்ல வைக்கிறது. ஒரு பத்திரிகை எழுத்தாளராக இருப்பவர் இப்படி பேசுவது சரியல்ல.இதே ஊடகங்களை வைத்து தான், 1991 - 96ல், இன்றைய முதல்வர் செய்த ஆட்சியைப் பற்றி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பி, தி.மு.க., வெற்றி பெற்றதை, அவர் இன்று நினைத்துப் பார்க்க வேண்டும். தினகரன், முரசொலி, சன் 'டிவி' என, தி.மு.க.,வுக்கு சொந்தமான ஊடகங்கள் போதாது என, கலைஞர் 'டிவி'யை ஆரம்பித்து, தங்களுக்கு சாதகமாக செய்திகளை வெளியிட்டு, மக்களின் ஆதரவை அன்று பெற்றது தி.மு.க.,இன்றைய முதல்வர் ஜெயலலிதா, கருணாநிதியை கைது செய்த போது, 'அய்யோ கொல்றாங்களே' என அழுது புரண்டதைப் படம் பிடித்து, சன் 'டிவி'யில் ஒளிபரப்பி, தமிழக மக்களிடம் அனுதாபம் பெற்றதை மறந்துவிட்டு, இன்று, ஊடகங்கள் தான் எல்லாரையும் இழிவுபடுத்துகின்றன எனச் சொல்வது, எந்த வகையில் நியாயம்?எந்த ஊடகங்கள், தி.மு.க.,வின் வெற்றிக்கு உதவியதோ, அதே ஊடகங்கள் தான், தி.மு.க.,வின் தோல்விக்கு காரணமான ஊழல்களை படம் பிடித்துக் காட்டுகின்றன.எது உண்மை, எது பொய் என்பது மக்களுக்கு நன்றாகத் தெரிந்துள்ளது. அதனால் தான், ஊழல் அரசியல்வாதிகள் இன்று அதிகளவில் சிறைக்குச் செல்வதை, அவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.தப்பு செய்தவன், தண்டனை அனுபவித்துத் தானே ஆக வேண்டும்.
மாணவர் தவிப்பு புரியுமா? வி.ஜெயராமன், ஆதம்பாக்கம், சென்னையிலிருந்து எழுதுகிறார்: பத்தாம் வகுப்பு மெட்ரிகுலேஷன் தேர்வு முடிவு, கடந்த, மே 27ல் வெளியானது. எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்காத பல மாணவர்கள், மறு கூட்டலுக்கு, ஒவ்வொரு பாடத்திற்கும், 315 ரூபாய் தேர்வுத்துறைக்கு செலுத்தி விண்ணப்பித்தனர். இதற்கான கடைசி நாள், ஜூன் 3ம் தேதி. இதனிடையே, சிறப்பு மறுதேர்வு அட்டவணையும் வெளியாகி, தேர்வுகளும் நடந்து முடிந்துவிட்டன.பிளஸ் 1 வகுப்புகளும், ஜூலை முதல் தேதியில் தொடங்கிவிட்டன. ஆனால், விண்ணப்பித்து 40 நாட்களுக்கு மேலாகியும், பல மாணவர்களுக்கு, இன்னும் மறுகூட்டல் முடிவுகளை, தேர்வுத்துறை தெரிவிக்கவில்லை. மதிப்பெண் குறைவாக பெற்றதன் மூலம், தேர்வில் தோல்வி அடைந்த ஒரு சில மாணவர்கள், சிறப்பு மறுதேர்வை எழுதுவதா, வேண்டாமா என்ற குழப்பத்தில், படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் தவிக்கின்றனர்.வெற்றி பெற்று, எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காத மாணவர்கள் பலர், தாங்கள் விரும்பிய பாடப்பிரிவு கிடைக்காததால், பள்ளியில் சேர முடியாத நிலையில் உள்ளனர்.மாணவர்களின் கல்வியில் அக்கறை கொண்டு, அடுத்த ஆண்டிலாவது, மறுகூட்டல் கோரி விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு, குறிப்பிட்ட தேதிக்குள் முடிவுகளை, தேர்வுத்துறை அறிவிக்க வேண்டும். மெட்ரிகுலேஷன் தேர்வுத்துறையிடம் சென்று நேரடியாக கேட்டும், இதற்கு தீர்வு ஏற்படவில்லை. இனியாவது, சம்பந்தப்பட்ட கல்வித் துறையினர், உரிய நடவடிக்கை எடுப்பரா?
காட்சிக்கு வையுங்கள்!அ.குணசேகரன், புவனகிரியிலிருந்து எழுதுகிறார்: நம் நாட்டில், இன்று பல கோவில்களை அரசு எடுத்துக் கொண்டாலும், சில கோவில்கள், அரசர்கள் காலத்திலிருந்து, அந்தந்த கோவில்களின் 'டிரஸ்டி'களின் நிர்வாகத்தில் தான் இன்றும் உள்ளன.தமிழகத்தைப் பொறுத்தவரையில், கடைசியாக, சிதம்பரம் தில்லை நடராஜர் கோவில் தீட்சிதர்களிடமிருந்து பிடுங்கப்பட்டு, இந்து அறநிலையத் துறையினரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில், நம் நாட்டில் அன்று, அரசர்கள் எப்படியெல்லாம், தங்களது செல்வங்களை பாதுகாக்கும் பெட்டகமாக கோவில்களை உபயோகப்படுத்தி வந்தனர் என்பதற்கு உதாரணமாக, இன்று, திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமி கோவிலில் கண்டுபிடிக்கப்பட்ட செல்வக் குவியல்களே, ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாக இருக்கிறது.ஆறாவது அறை திறக்கப்படுவதற்கு முன்பாகவே, லட்சத்து கோடிகளைத் தாண்டிவிட்ட செல்வத்தின் மதிப்பு, அதை ஆய்வு செய்யச் சென்ற நீதிபதியையும், அதிகாரிகளையும், நம்மையும் வியப்பில் ஆழ்த்தி, மயக்கம் வர செய்துவிட்டது.இன்று நம் நாட்டில், ஊழல் அரசியல்வாதிகள், ஊழல் அரசு அதிகாரிகள் நிறைந்துள்ள நேரத்தில், எப்படி இந்த செல்வத்தை எல்லாம் பாதுகாத்து வைக்க முடியும் என்று நினைக்க வைத்துவிட்டது. இந்த சொத்துக்கள், எப்படி கோவிலுக்கு வந்தது என்பதை ஆராயாமல், இவை அனைத்தும் கவனமாக வீடியோ படம் எடுக்கப்பட்டு, தொன்மையான செல்வங்களை, அருங்காட்சியகம் அமைத்து, உலக மக்கள் கண்டுகளிக்க வழிவகுக்க வேண்டும்.ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய செல்வங்களைக் கொண்டு, நம் புராதன கலைத் திறனை உலகிற்கு எடுத்துக்காட்ட, இதைவிட சிறந்த சான்று ஏதும் கிடையாது.
உ.பி., மட்டும் இந்தியாவா?க.பொம்மு சுப்பையா, திண்டுக்கலிலிருந்து எழுதுகிறார்: 'இந்தியாவின் வருங்கால பிரதமர்; இந்தியாவின் எதிர்காலம்' என்று, காங்கிரஸ் மூத்த தலைவர்களால் ராகுல் தற்போது வர்ணிக்கப்படுகிறார். தத்தம் பதவிகளை கெட்டியாக பிடித்துக் கொள்ளவும், உயர்த்திக் கொள்ளவுமே, இவர்கள் அவ்வாறு கூறுகின்றனர் என்பது, நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும்.வெகு விரைவிலேயே, சட்டசபை தேர்தலை சந்திக்கப் போகும் உ.பி.,யில் மட்டும், விவசாயிகளுக்காக, ராகுல் தினமும் போராடுகிறார்; வயலில் இறங்கி நடக்கிறார்; ஏழைகள் வீட்டில் தேநீர் அருந்துகிறார்; தடையை மீறி ஊர்வலம் செல்கிறார். இதைப் பார்க்கும் போது, வேடிக்கையாக இருக்கிறது. ஏன், இந்தியாவின் மற்ற மாநிலங்களில் விவசாயிகள் இல்லையா அல்லது அவர்களுக்கு பிரச்னைகள் தான் இல்லையா?இந்தியாவின் ஒரு பகுதியான தமிழகத்தில், நித்தம் உயிர் பலி கொடுக்கும் மீனவர்களுக்காக, ஒரு ஊர்வலமோ, ஆர்ப்பாட்டமோ நடத்த, இங்கு அவர் வரட்டுமே. அப்போது கூறலாம், அவர் இந்தியாவின் எதிர்காலம் என்று!


