வானத்தில் பறப்பது போலிருக்கிறது கல்லூரிப் பருவம் : முதலாண்டு மாணவர்களின் "கலகல' சுவாரஸ்யங்கள்
வானத்தில் பறப்பது போலிருக்கிறது கல்லூரிப் பருவம் : முதலாண்டு மாணவர்களின் "கலகல' சுவாரஸ்யங்கள்
வானத்தில் பறப்பது போலிருக்கிறது கல்லூரிப் பருவம் : முதலாண்டு மாணவர்களின் "கலகல' சுவாரஸ்யங்கள்
பள்ளிப்பருவம் முடிந்து கல்லூரிக்குள் காலடி எடுத்துவைக்கும் மாணவர்களுக்கு கட்டுப்பாடுகள் கட்டவிழ்ந்து, செயல்களில் சுதந்திர காற்று வீசத்துவங்கும்.
சி. ஸ்வாதி (எம்.பி.பி.எஸ்., மதுரை மருத்துவக் கல்லூரி): பள்ளியில் தினமும் படிப்பு, தேர்வு கட்டாயம் நடக்கும். பொதுத்தேர்வை நினைத்து எப்போதும் பதட்டம் தான். இங்கே எதுவும் கட்டாயம் இல்லை. நான் சென்னையில் படித்தவள். வீட்டுக்கு ஒரே பெண். இங்கு விடுதியில் தங்கியிருப்பது கொஞ்சம் பயம், நிறைய சந்தோஷமாக இருக்கிறது. பேராசிரியர்கள் நண்பர்களாக பழகுவதால், படிப்பும், வகுப்பறையும் பிடித்திருக்கிறது.
டி. ஹரிபிரகாஷ் ( மதுரை காமராஜ் பல்கலை கல்லூரி): காலை எட்டு மணி முதல் மாலை ஆறுமணி வரை பள்ளியில் இருக்க வேண்டும். வகுப்பறைக்கு உள்ளேயே அடைபட்டு உடலும், மனமும் புழுங்கும். எழுந்து நின்றால் கூட, ஆசிரியர் கேள்வி கேட்பார். இங்கே அப்படியில்லை. கல்லூரியில் சுதந்திர காற்று மனதை சுகமாக்குவதால், படிப்பதும் சுமையாக தெரியவில்லை. பள்ளித் தோழர்கள் உடன் படிப்பது, பெரிய பலமாக நினைக்கிறேன்.
எம். சங்கர் ( ஜி.டி.என்., கலைக்கல்லூரி, திண்டுக்கல் ): பள்ளியில் தமிழ் வழி கல்வி. கல்லூரியில் ஆங்கில வழிக்கல்வி, சற்று சிரமமாக உள்ளது. இங்கு வந்த பிறகு தான் நூலகம் செல்லும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. விளையாட்டை அதிகம் ஊக்குவிக்கின்றனர். நல்ல நண்பர்களை தேர்வு செய்தால் கல்லூரி வாழ்க்கை வழி தவறாமல் செல்லும்.
கே.லாவண்யா (சுப்பிரமணியா பொறியியல் கல்லூரி, பழநி): பள்ளியில் மரியாதையைவிட பயம்தான் அதிகம். நண்பர்களிடம் பேச நேரம் கிடைக்காது. கல்லூரியில் நேரெதிராக, ஆனால் நன்றாக உள்ளது.
வி.ஸ்ருதி ஜெயலட்சுமி (தேனி கலை அறிவியல் கல்லூரி): கல்லூரியில் திறமையை வெளிப்படுத்த வாய்ப்புகளும், புதிய நம்பிக்கையும் பிறந்துள்ளது. நிறைய நண்பர்கள் கிடைத்துள்ளனர். சீருடை கட்டுப்பாடு இல்லை. சுதந்திரத்தை அனுபவிக்க முடிகிறது. இது படிப்பை கெடுக்காது, புரிந்து படிக்க உதவும்.
எம்.ஜி.மணிகண்ட பிரபு (தேனி கலை அறிவியல் கல்லூரி): பள்ளியில் மனப்பாடம் செய்து தேர்வெழுதினோம். கல்லூரி முதல் நாளிலேயே நிறைய நண்பர்கள் கிடைத்து விட்டனர். எனது எதிர்கால தேடலுக்கு தேவையான எல்லா வாய்ப்புகளையும் உருவாக்கி கொடுத்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது.
கே.கலைவாணி (அரசு மகளிர் கலை கல்லூரி, ராமநாதபுரம்): கல்லூரி வாழ்க்கை ஜாலியாக இருக்கும், என்று சொல்வார்கள். புதிய தோழிகள், புதிய இடம் என்பதால் இதுவரை எனக்கு வருத்தமாகவே உள்ளது. பள்ளிக்கு செல்லும்போது பெற்றோர் எதுவும் சொல்லவில்லை. ஆனால் கல்லூரிக்கு வரும்போது, 'அட்வைஸ்' தாங்க முடியல.
சி.அகிலன் (செய்யது ஹமீதா கலை கல்லூரி, கீழக்கரை): கல்லூரியில் எந்த சந்தேகம் என்றாலும், ஆசிரியரிடம் தைரியமாக கேட்க முடிகிறது. அது ஏன்னு தெரியல. விதவிதமாக ஆடை அணியத் தோன்றுகிறது. புத்தக சுமைக்கு விடுமுறை கிடைத்து விட்டது. வழக்கத்துக்கு மாறாக 'பாக்கெட் மணி' அதிகமாக கிடைக்கிறது.
ஜி. விஜயலட்சுமி (அழகப்பா அரசு கலைக்கல்லூரி , காரைக்குடி): புதிய தோழிகள், புதிய இடம் என்பதால் கொஞ்சம் பயமாக இருக்கிறது. தினமும் பாடங்களை படிக்க வேண்டிய கட்டாயம் இல்லை. பெற்றோர், ஆசிரியர்களின் கெடுபிடி குறைந்ததே சந்தோஷம் தான்.
ஜி.வீரமணி (அழகப்பா அரசு கலைக்கல்லூரி, காரைக்குடி): கல்லூரித் தோழர்களை மாமா, மாப்பிள்ளை, பங்காளி என உரிமையோடு அழைக்க முடியும். அவரவர் விருப்பப்படி படிக்கலாம். ஒரு நோட்டில், அனைத்து பாடங்களின் குறிப்பையும் எடுத்துக் கொள்ளலாம். கல்லூரி பருவத்தில் சந்தோஷத்தால் 'அழகு' மிளிரும். இனிமே நானும் மிளிருவேனே.
எம். சையதலி பாத்திமா (செந்திகுமார நாடார் கல்லூரி, விருதுநகர்): பள்ளியில் ஆசிரியர், மாணவர் இடையே இடைவெளி இருக்கும். மாணவிகளிடையே 'ஈகோ' இருக்கும். பயம் மறந்து, துணிச்சலாக முடிவெடுக்கும் திறன், கல்லூரி வந்த பின் ஏற்படுகிறது. தனித்திறமையை வளர்த்துக்கொள்ளும் புதிய களம் இது.
எம். செண்பகராஜன், (செந்திகுமார நாடார் கல்லூரி, விருதுநகர்): திருமண வீட்டில் புது உறவுகள் போல், புது நண்பர்கள் மகிழ்ச்சியை தருகின்றனர். கல்லூரியில் சுதந்திரம் இருக்கிறது. நம்மை நாம் சீர்படுத்தி கொண்டால் எதிலும் வெற்றி பெறலாம்.