சபாநாயகர் பதவிக்கு தேர்தல்: இண்டியா கூட்டணியும் போட்டி
சபாநாயகர் பதவிக்கு தேர்தல்: இண்டியா கூட்டணியும் போட்டி
சபாநாயகர் பதவிக்கு தேர்தல்: இண்டியா கூட்டணியும் போட்டி
UPDATED : ஜூன் 25, 2024 01:23 PM
ADDED : ஜூன் 25, 2024 10:51 AM

புதுடில்லி: சபாநாயகர் பதவிக்கு தே.ஜ., கூட்டணி சார்பில் ஓம்பிர்லாவும், எதிர்க்கட்சியான ‛ இண்டியா ' கூட்டணி சார்பில் கொடிக்குன்னில் சுரேஷ்-ம் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதனையடுத்து இந்த தேர்தலில் போட்டி உறுதி ஆகி உள்ளது.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிப்பெற்றது. இதில் யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மோடி, 3வது முறையாக பிரதமரானார். அவரது அமைச்சரவையில் கூட்டணி கட்சிகளுக்கும் கணிசமான இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன.
லோக்சபா சபாநாயகர் பதவியை கைப்பற்ற சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியும், நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் முட்டி மோதின. இதற்கிடையே தற்காலிக சபாநாயகராக பார்த்துஹரி மஹதப் என்பவர் நியமிக்கப்பட்டார்.
அவர் நேற்றைய (ஜூன் 24) முதல்நாள் கூட்ட அமர்வில், அனைத்து எம்.பி.,க்களுக்கும் பதவி பிரமாணம் செய்து வைத்தார். 17வது லோக்சபாவின் சபாநாயகராக இருந்த ஓம் பிர்லாவை மீண்டும் சபாநாயகராக்க பா.ஜ., தலைமை முடிவு செய்துள்ளது. இன்று பிரதமர் மோடியை சந்தித்த ஓம் பிர்லா சிறிது நேரம் ஆலோசனையில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து இன்று, அவர் வேட்புமனு தாக்கல் செய்தார். பெரும்பான்மை உறுப்பினர்களால் ஓம் பிர்லா சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்.
இண்டியா கூட்டணி வேட்பாளர்
இதனிடையே, துணை சபாநாயகர் பதவியை தங்களுக்கு வழங்கினால், ஆளுங்கட்சி வேட்பாளரை ஆதரிக்க தயாராக உள்ளதாக காங்கிரஸ் அறிவித்து இருந்தது. இந்த விவகாரத்தில் ஒரு மித்த முடிவு ஏற்படவில்லை.
இதனையடுத்து காங்., எம்.பி., கொடிக்குன்னில் சுரேஷ் என்பவர், ‛ இண்டியா ' கூட்டணி சார்பில் , சபாநாயகர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்தார். இதனையடுத்து தேர்தல் நடப்பத உறுதி ஆகி உள்ளது.