Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/இயற்கை உரத்தை பயன்படுத்தி காய்கறி உற்பத்தி

இயற்கை உரத்தை பயன்படுத்தி காய்கறி உற்பத்தி

இயற்கை உரத்தை பயன்படுத்தி காய்கறி உற்பத்தி

இயற்கை உரத்தை பயன்படுத்தி காய்கறி உற்பத்தி

ADDED : ஜூலை 17, 2011 02:09 AM


Google News
மோகனூர்: திடக்கழிவு மேலாண் திட்டத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட இயற்கை உரத்தை கொண்டு காய்கறி, கீரை, பழவகைககள் உற்பத்தி செய்து, கடந்த இரண்டு ஆண்டில், 30 ஆயிரம் ரூபாய் வருவாய் ஈட்டி, மோகனூர் டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் சாதனை படைத்துள்ளது.நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, 5 நகராட்சி, 19 டவுன் பஞ்சாயத்து மற்றும், 331 கிராம பஞ்சாயத்துகளில் திடக்கழிவு மேலாண் திட்டம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் செயல்படுத்தப்பட்டது. அதன்படி, அந்தந்த நகராட்சி, டவுன் மற்றும் கிராம பஞ்சாயத்துகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பைகளாக தரம் பிரிக்கப்பட்டது.அவ்வாறு தரம் பிரிக்கப்பட்ட மக்கும் குப்பைகளை கொண்டு இயற்கை உரம் தயாரித்து, அதை விவசாயிகளுக்கு குறைந்த விலைக்கு விற்பனை செய்து, அதன் மூலம் சம்மந்தப்பட்ட பஞ்சாயத்து நிர்வாகத்தினர் கணிசமான தொகையை வருவாய் பெறமுடியும். இந்த திட்டத்தை, ஒரு சில பஞ்சாயத்து நிர்வாகத்தினர் மட்டுமே முறையாக பின்பற்றி இயற்கை உரம் தயாரித்து வருகின்றனர்.

அதில், மோகனூர் டவுன் பஞ்சாயத்து நிர்வாகத்தினர், இயற்கை உரத்தை தயாரித்து விற்பனை செய்வதுடன், சீஸனுக்கு ஏற்றவாறு காய்கறிகள், பழ வகைககள், கீரை வகைகள் உற்பத்தி செய்து, கடந்த இரண்டு ஆண்டுகளில், 30 ஆயிரம் ரூபாய் வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளனர்.மோகனூர் டவுன் பஞ்சாயத்தில், 15 வார்டுகள் உள்ளன. அங்கு வசிக்கும் மக்களிடம், பஞ்சாயத்து பணியாளர்கள் வீடு வீடாக சென்று குப்பைகளை சேகரிக்கின்றனர். அவ்வாறு சேகரித்த குப்பைகளை, மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரிக்கின்றனர்.தரம் பிரிக்கப்பட்ட குப்பைகளை, திடக்கழிவு மேலாண் திட்டத்துக்காக மணியங்காளிப்பட்டியில் உள்ள மூன்று ஏக்கர் நிலத்தில் கொண்டு குவிக்கின்றனர். அங்கு ஈ.எம்.கரைசலை தெளித்து குப்பைகளை மக்க வைக்கின்றனர். குறிப்பிட்ட நாட்களுக்கு பின் மக்கிய குப்பைகள் உரமாக மாறுகிறது.

அதை கிலோ, 2 ரூபாய்க்கு விவசாயிகளுக்கு விற்பனை செய்கின்றனர். கத்தரி, வெண்டங்காய், முருங்கை, தக்காளி போன்ற காய்கறிகளும், மல்லிகை பூ, அரளி, செவ்வரளி வகைகளும், மாதுளை பழவகைகளும், சீசன் காய்கறிகளும் பயிர் செய்து, மோகனூர் உழவர் சந்தையில் விற்பனை செய்து பஞ்சாயத்து நிர்வாகத்துக்கு வருவாய் சேர்க்கின்றனர்.தற்போது, மிளகாய், தக்காளி நாற்றுகள் பதியன் போடப்பட்டுள்ளது. அதற்காக தினமும் ஆறு பேர் ஷிப்ட் முறையில் பணியில் ஈடுபட்டுள்ளனர். இயற்கை உரம், காய்கறி, கீரை வகைகள் மூலம் ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம், 2,000 ரூபாய் கிடைக்கிறது.திடக்கழிவு மேலாண் திட்டத்தை செயல்படுத்தியதன் மூலம், மற்ற நகராட்சி, டவுன் மற்றும் கிராம பஞ்சாயத்துகளுக்கு, மோகனூர் டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் ஒரு முன்னோடியாக திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us