ADDED : ஆக 14, 2011 03:05 AM
திருப்பூர் : 'ரூட்ஸ் கார்பரேஷன்' நிறுவனம் சார்பில் திருப்பூரில் 95
அறைகளுடன் 'ஜிஞ்சர்' ஓட்டல் திறப்பு விழா நேற்று நடந்தது. மத்திய உள்துறை
அமைச்சர் சிதம்பரம் ஓட்டலை திறந்து வைத்தார்.இந்தியன் ஓட்டல்ஸ் கம்பெனி
லிட்(ஐ.எச்.சி.எல்.,) நிறுவனத்தின் சார்பு நிறுவனமான 'ரூட்ஸ் கார்பரேஷன்'
நிறுவனம் சார்பில், திருப்பூர் காங்கயம் ரோடு, பத்மினி கார்டனில் புதியதாக
கட்டப்பட்டுள்ள 'ஜிஞ்சர்' ஓட்டல் திறப்பு விழா நேற்று நடந்தது; மத்திய
உள்துறை அமைச்சர் சிதம்பரம் ஓட்டலை திறந்து வைத்தார்; நல்லி சின்னசாமி
செட்டி குழுமங்களின் தலைவர் நல்லி குப்புசாமி முன்னிலை வகித்தார்.
ஸ்ரீசஷ்டி குழுமங்களின் தலைவர் பத்மினி, நிர்வாக இயக்குனர் சுதன்,
இயக்குனர் துர்கா வைஷ்ணவி மற்றும் ஐ.எச்.சி.எல்., நிறுவன அதிகாரிகள்
விழாவில் பங்கேற்றனர்.
இந்தியன் ஓட்டல்ஸ் கம்பெனி (ஐ.எச்.சி.எல்.,) ஓட்டல்
பிரிவு செயல் இயக்குனர் அபிஜித் முகர்ஜி, ரூட்ஸ் நிறுவன தலைமை செயல்
அலுவலர் மற்றும் இயக்குனர் பிரபாத் பனி கூறியதாவது:அகமதாபாத், வதோதரா,
புதுடில்லி, புனே என, 24 இடங்களில் ஜிஞ்சர் ஓட்டல்கள் ஏற்கனவே இயங்கி
வருகின்றன. வரும் மாதங்களில் பெங்களூரு (கோரமங்கலா), பரிதாபாத், ஜெய்பூர்,
நொய்டா, அமிர்தசரஸ், சண்டிகர், ஐதராபாத், சென்னை மற்றும் மும்பை உள்ளிட்ட
இடங்களில் ஓட்டல்கள் அமைக்கப்பட உள்ளன.திருப்பூரில் உள்ள ஜிஞ்சர் ஓட்டலில்,
குளிர்சாதன வசதிகொண்ட விசாலமான 95 அறைகள், மின்னணு பூட்டுகள், எல்.சி.டி.,
'டிவி', போன், சிறிய பிரிட்ஜ், டீ, காபி மேக்கர் மற்றும் சொகுசு படுக்கை
என பல்வேறு வசதிகள் உள்ளன, என்றனர்.