பாகிஸ்தான் மீண்டும் வாலாட்ட முயற்சி முன்னாள் ராணுவ தளபதி மாலிக் தகவல்
பாகிஸ்தான் மீண்டும் வாலாட்ட முயற்சி முன்னாள் ராணுவ தளபதி மாலிக் தகவல்
பாகிஸ்தான் மீண்டும் வாலாட்ட முயற்சி முன்னாள் ராணுவ தளபதி மாலிக் தகவல்
ADDED : ஜூலை 27, 2011 12:28 AM
டிராஸ்(காஷ்மீர்) : 'கார்கில் போரைப் போன்று, இந்தியா மீது பாகிஸ்தான் மீண்டும் போர் தொடுக்க வாய்ப்புள்ளது' என்று முன்னாள் ராணுவ தளபதி மாலிக் கூறியுள்ளார். காஷ்மீரில் உள்ள கார்கில் மலைப்பகுதியில், கடந்த 1999 ம் ஆண்டு மே மாதத்தில் பாகிஸ்தான் ராணுவம் ஊடுருவியது. அவர்களை விரட்டியடிக்க, 'ஆபரேஷன் விஜய்' என்ற பெயரில், இந்தியா ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது. இரண்டு மாதங்கள் நீடித்த போரின் காரணமாக, பாகிஸ்தான் ராணுவம் பின்வாங்கி, ஆக்கிரமிப்புப் பகுதியை விட்டு வெளியேறியது. இந்தப் போரில், பாகிஸ்தான் ராணுவத் தரப்பில் ஏராளமானோர் பலியாகினர். இந்திய ராணுவத்தைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் வீரர்கள் உட்பட 543 பேர் உயிர் நீத்தனர். கார்கில் போரின் வெற்றி விழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியின் போது, போரில் உயிர் நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது.
கார்கில் போரின் 12 ம் ஆண்டு வெற்றி விழா, நேற்று முன்தினம் காஷ்மீரில் தொடங்கியது. இதில், போரில் பங்குகொண்ட ராணுவ அதிகாரிகள், வீரர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் போரில் உயிர் நீத்த அதிகாரிகளின் குடும்பத்தினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இரண்டு நாட்கள் நடந்த விழாவில், முதல் நாளான நேற்று முன்தினம், போரில் உயர் நீத்த வீரர்களுக்கு, இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இரண்டாம் நாளான நேற்று, டிராசில் உள்ள போர் நினைவிடத்தில், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்பு, படை வீரர்கள் கூட்டம், போலோ விளையாட்டு, போர் நினைவுச் சேவை, பாண்டு வாத்தியம் இசைத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. கார்கில் போரில் பங்குபெற்ற முன்னாள் ராணுவ தளபதி மாலிக்கும் இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: உளவுத்துறையின் தோல்வியால் தான் கார்கில் ஆக்கிரமிப்பு நடந்தது. அப்போது, பாகிஸ்தான், இந்தியா மீது மறைமுகமாக போர் தொடுத்தது. கார்கில் போர் போன்று, மீண்டும் இந்தியா மீது பாகிஸ்தான் போர் தொடுக்க வாய்ப்பு உள்ளது. எனினும், அதனை எதிர்கொள்ள இப்போது நாம் தயாராக இருக்கிறோம். கார்கில் ஆக்கிரமிப்பு, முதலில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் சம்பவம் போன்று தான் இருந்தது. ஆனால், அந்தப் பகுதியில், ராணுவ வாகனங்களும், ஹெலிகாப்டர்களும் இருந்ததைப் பார்த்ததும் தான், அதில், பாகிஸ்தானின் கைங்கர்யம் இருப்பது தெரியவந்தது. கார்கில் சம்பவத்திற்குப் பின்னர், எல்லைப் பகுதியில், நமது ராணுவம் நவீனமயமாக்கப்பட்டுள்ளது. ரேடார் கருவிகள், ஆளில்லா உளவு விமானங்கள், சாட்டிலைட்டுகள் உள்ளிட்டவற்றைக் கொண்டு எல்லைப் பகுதியில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மாலிக் கூறினார்.


