Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ஜெ., திட்டம் : அதிருப்தி இல்லை என்கிறார் கருணாநிதி

ஜெ., திட்டம் : அதிருப்தி இல்லை என்கிறார் கருணாநிதி

ஜெ., திட்டம் : அதிருப்தி இல்லை என்கிறார் கருணாநிதி

ஜெ., திட்டம் : அதிருப்தி இல்லை என்கிறார் கருணாநிதி

UPDATED : ஆக 21, 2011 02:48 AMADDED : ஆக 19, 2011 11:20 PM


Google News
Latest Tamil News
சென்னை: ''புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக மாற்றும் அறிவிப்பில், எனக்கு எந்தவொரு அதிருப்தியும் இல்லை.

வீட்டையோ, கட்டடத்தையோ மருத்துவமனை ஆக்குவது தவறல்ல,'' என தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசினார்.

தி.மு.க., இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில், சமச்சீர் கல்வி வெற்றிவிழா பொதுக்கூட்டம், சென்னை மயிலாப்பூரில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்று தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசியதாவது: சமச்சீர் கல்விக்கு கிடைத்த வெற்றி, சமுதாயத்திற்கு கிடைத்த வெற்றி. எதிர்கால சமுதாயம் வாழ, வளம் பெற, வழிதோன்றல்கள் ஒழுங்கான பாதையில் செல்ல கிடைத்த வெற்றி என்று நான் சொல்ல மாட்டேன். இந்த வெற்றியை பெற சுப்ரீம் கோர்ட் வரை செல்ல வேண்டியதாயிற்று. சமம், சமத்துவம் என்ற வார்த்தையே பிடிக்காததால், தமிழகத்தை ஆளும் ஆட்சியாளர்கள் சமச்சீர் கல்வியை எதிர்த்தார்கள். கடந்த தி.மு.க., ஆட்சியில் பெரியார் பெயரில் 100 சமத்துவபுரங்கள் அமைக்கப்பட்டன. அந்த வீடுகளில், பிராமணர், பிராமணர் அல்லாதவர் என எவ்வித பாகுபாடும் இன்றி குடியேற்றப்பட்டனர்.

மேலும் பல இடங்களில் இதுபோன்ற குடியிருப்புகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன் பின் ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க., அரசு, அடையாளத்திற்காகவது ஒரு சமத்துவபுரமாவது திறந்ததா அல்லது அதற்கான அடிக்கல்லாவது நாட்டியதா?. சமத்துவத்தை பிடிக்காதது போல், சமச்சீர் கல்வியும் அவர்களுக்கு பிடிக்கவில்லை. காலை முதல் மாலை வரை பத்து தடவைக்கு மேல் பார்த்து, 500 கோடி ரூபாய் செலவழித்து கட்டிய புதிய தலைமைச் செயலகத்தை என்ன செய்யப்போகிறார்கள் என்ற எண்ணம் இருந்தது. தற்போது இந்த கட்டடத்தை மருத்துவமனையாக மாற்றப்படும் என்ற அறிவிப்பு வெளிவந்துள்ளது.

இதில் எனக்கு எந்தவொரு அதிருப்தியும் இல்லை. வீட்டையோ அல்லது கட்டடத்தையோ மருத்துவமனை ஆக்குவது தவறல்ல. ஏனென்றால், அதற்கு வழிகோலியவன் நான்தான். எனது கோபாலபுரம் வீட்டை, எனது இறப்பிற்கு பின் மருத்துவமனையாக்கப்படும் என அறிவித்தவன் நான் தான். விஸ்தாரமாக கட்டிய கட்டடத்தை விட்டுவிட்டு குருவிக் கூடு போன்று இருக்கும் கட்டடத்திற்குதான் போவோம் என்று சொல்வது அவர்களுடைய பாடு. அவர்களை நம்பி வந்தவர்கள் பாடு. அதில் நான் தலையிட விரும்பவில்லை. தமிழகத்தில் துக்ளக் தர்பார் நடக்கிறது. நீண்ட நாள் இந்த ஆட்சி நடைபெற முடியாது. மக்கள் விழிக்கும் காலம் வரும். யார் நமக்கு பாடுபடுகிறார்கள்; உயிரை கொடுத்தார்கள்; கொடுப்பார்கள் என்பது அவர்களுக்கு தெரியும். அவர்களை நம்பித்தான் தி.மு.க.,வும் வெற்றிநடை போடுகிறது. அந்த வெற்றிப்பயணம் தொடரும். இவ்வாறு கருணாநிதி பேசினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us