ADDED : ஜூலை 25, 2011 10:09 PM
நகரி:நகரி அருகே நடந்த சாலை விபத்தில், தமிழகத்தைச் சேர்ந்த இருவர் உட்பட மூன்று இளைஞர்கள், பலியாயினர்.சென்னை தாம்பரம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ், 32, காஞ்சிபுரம் அடுத்த சந்தோஷ்புரத்தைச் சேர்ந்த மகேஷ், 30, ஆகிய இருவரும், இவர்களது நண்பர்கள் நால்வரும், மூன்று மோட்டார் சைக்கிள்களில் சென்னையில் இருந்து திருப்பதிக்கு, நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தனர்.நகரி அடுத்த குண்டராஜுகுப்பம் அருகே, வெங்கடேஷ், மகேஷ் இருவரும் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது, எதிரே வந்து கொண்டிருந்த லாரி மோதியதில், வெங்கடேஷ், சம்பவ இடத்திலேயே இறந்தார்.
படுகாயம் அடைந்த நிலையில் மகேஷ், சிகிச்சைக்காக, சென்னைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்து விட்டார்.பிரேத பரிசோதனைக்குப் பின், இருவரின் உடல்களும் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.நகரி அடுத்த ஒருகுண்டாபுரம் கிராமத்தைச் சேர்ந்த, பிரதீப், 20, என்பவர் புத்தூரிலிருந்து வந்து கொண்டிருந்தபோது ,வேலு என்பவரை, தனது மோட்டார் சைக்கிளில், ராமாபுரம் அருகே ஏற்றிக் கொண்டார்.கிளம்பிய சிறிது நேரத்தில், புத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்த லாரி மோதியதில் பிரதீப் சம்பவ இடத்திலேயே பலியானார்.படுகாயம் அடைந்த வேலுவை, உறவினர்கள், சிகிச்சைக்காக சென்னைக்கு அழைத்துச் சென்றனர்.இரு விபத்துகள் குறித்து, நகரி போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.