அரிசி கடத்திய 41 பேருக்கு குண்டாஸ் :சிவில் சப்ளைஸ் சி.ஐ.டி., அதிரடி
அரிசி கடத்திய 41 பேருக்கு குண்டாஸ் :சிவில் சப்ளைஸ் சி.ஐ.டி., அதிரடி
அரிசி கடத்திய 41 பேருக்கு குண்டாஸ் :சிவில் சப்ளைஸ் சி.ஐ.டி., அதிரடி
ADDED : ஜூலை 12, 2011 12:24 AM
சென்னை : ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட 41 பேரை, குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையினர் கைது செய்து, குண்டர் சட்டத்தில் அடைத்துள்ளனர்.
பொதுமக்களுக்கு இலவசமாக தமிழக அரசால் வினியோகிக்கப்படும், ரேஷன் அரிசியை, வெளிமாநிலங்களுக்கு கடத்துவோர் மீதும், அவர்களுக்கு உடந்தையாக இருப்போர் மீதும், குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வுத் துறையினர் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த வகையில், கடந்த ஒன்றரை மாதத்தில், முக்கிய கடத்தல் பேர்வழிகள் 37 பேர் கைது செய்யப்பட்டு, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, கடந்த 7ம் தேதி, வேலூர், கடலூர் பகுதிகளில் ரேஷன் அரிசியை சேகரித்து, ஆந்திர மாநிலத்திற்கு கடத்தி வந்த, வேலூரைச் சேர்ந்த அப்சரா, 43, சோளிங்கரைச் சேர்ந்த சதீஷ், 31, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன், 32, ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதில், மணிகண்டன், ராமநாதபுரம், சாயல்குடி மற்றும் முதுகுளத்தூர் ஆகிய பகுதிகளில் ரேஷன் அரிசியை சேகரித்து, கள்ளச்சந்தையில் கோழித் தீவனமாகவும், உணவுப் பொருட்களுக்கு தேவைப்படும் மாவாகவும் விற்பனை செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த 8ம் தேதி, மதுரையைச் சுற்றியுள்ள ரேஷன் அட்டைதாரர்களிடம் அரிசியை சேகரித்து, அரிசி அரவை ஆலைகள் மற்றும் மாவு மில்களுக்கு கள்ளச்சந்தையில் விற்று வந்த முத்து ராமலிங்கம், 41, என்பவர் கைது செய்யப்பட்டார். இவர்களிடம் இருந்து, 50 குவிண்டால் அரிசி கைப்பற்றப்பட்டது. இதுவரை, இரண்டு மாதங்களில் 41 பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். அரிசி கடத்தலில் ஈடுபடுவோரின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கையிலும் போலீசார் இறங்கியுள்ளனர்.