சேலம்: ''கிராமப்புறங்களை காட்டிலும், நகர்ப்பகுதிகளில் அதிக அளவு தற்கொலைகள் நடைபெறுகின்றன,'' என சேலத்தில் நடந்த கருத்தரங்கில், பெங்களூரு தற்கொலை தடுப்பு மைய மேலாளர் லதா ஜேக்கப் பேசினார்.
பெங்களூரு தற்கொலை தடுப்பு அமைப்பான சகாய் கிளினீக் மேனேஜர் லதா ஜேக்கப் பேசியதாவது:பொதுவாக தற்கொலை, கிராமப்புறங்களை காட்டிலும், நகர்ப்பகுதிகளில் அதிக அளவு காணப்படுகிறது. நகர்ப்பகுதிகளில், பகிர்ந்து கொள்வதற்கு ஆட்கள் இல்லாத நிலை, உறவுகள் பலவீனம், தனியாக இருப்பது உள்ளிட்டவை தற்கொலைக்கு முக்கியமாக அமைகிறது.ஒரு லட்சம் பேரில், 16 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். உலக அளவில் மூன்று விநாடிக்கு ஒருவர் தற்கொலைக்கு முயற்சிக்கிறார். 40 விநாடிக்கு ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார் என, புள்ளிவிவரங்கள் கூறுகிறது. இந்தியாவில் மெட்ரோ பாலிடன் நகரங்களில் பெங்களூருவில் அதிக அளவில் தற்கொலைகள் நடக்கின்றன.இதில் கல்வி, வேலைவாய்ப்பின்மை, திருமண பிரச்சனை, உறவு சிக்கல் வரதட்சணை பிரச்சனை, பணப்பிரச்சனை, இயலாமை, சட்டப்பிரச்சனை உள்ளிட்டவை முக்கிய பிரச்சனையாக உள்ளது. தற்கொலை செய்து கொள்பவர்களில், 71 சதவிகிதம் பேர் திருமணமானவர்களாகவே உள்ளனர். தற்கொலைக்கான காரணத்தை தெரிந்து கொள்வதன் மூலம் மட்டுமே, தற்கொலையை தடுக்க முடியும்.