Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/மக்களை அலையவிடும் சான்றிதழ்களுக்கு 'குட்பை'; மாற்றத்துக்கு தயாராகிறது வருவாய் துறை

மக்களை அலையவிடும் சான்றிதழ்களுக்கு 'குட்பை'; மாற்றத்துக்கு தயாராகிறது வருவாய் துறை

மக்களை அலையவிடும் சான்றிதழ்களுக்கு 'குட்பை'; மாற்றத்துக்கு தயாராகிறது வருவாய் துறை

மக்களை அலையவிடும் சான்றிதழ்களுக்கு 'குட்பை'; மாற்றத்துக்கு தயாராகிறது வருவாய் துறை

UPDATED : செப் 21, 2025 09:03 AMADDED : செப் 20, 2025 08:08 PM


Google News
Latest Tamil News
சென்னை: அரசின் நலத் திட்ட பயன்களை பெற, பொது மக்களை அலையவிடும் வகையிலான சான்றிதழ்களுக்கு விடை கொடுக்க, வருவாய் துறை தயாராகி வருகிறது.

அரசு திட்டத்தில் பயனாளியாக சேர, ஒன்றுக்கு மேற்பட்ட சான்றிதழ்களுக்காக, மக்கள் அலைய வேண்டியுள்ளது. ஆதார் போன்ற அடையாள சான்றுகள் இல்லாத காலத்தில் உருவாக்கப்பட்ட நடைமுறை தற்போதும் அமலில் இருக்கிறது. ரேஷன் அட்டை இதனால், மக்கள் மீண்டும் மீண்டும் தாலுகா அலுவலகங்களுக்கு அலைய வேண்டிய நிலை ஏற்படுகிறது.

உதாரணமாக, மாற்றுத்திறனாளி ஓய்வூதியம் பெற விண்ணப்பித்தால், அவர் மாற்றுத்திறனாளி என்பதற்கான தேசிய அளவில் வழங்கப்பட்ட அடையாள அட்டை, ஆதார், ரேஷன் அட்டை ஆகியவற்றுடன் இருப்பிட சான்று, வருமான சான்று ஆகியவற்றை தாக்கல் செய்ய வேண்டும். இதில் இருப்பிடச் சான்று, வருமான சான்றுக்காக, இ - சேவை மையங்களில் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த விண்ணப்பங்களை, வருவாய் துறை தான் பரிசீலித்து முடிவு செய்கிறது. இதன் அடிப்படையில் பிரதான விண்ணப்பத்தையும், அதே அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர். ஒரு ஒய்வூதியத்துக்கு இருப்பிட சான்று, வருமான சான்று ஆகியவற்றுக்கு தனித்தனியாக மக்களை ஏன் அலையவிடுகின்றனர் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது மட்டுமல்லாது, அரசின் 'டெண்டர்' பெறுவது போன்ற பணிகளில், செல்வ நிலை சான்று பெறவும், அலைய வேண்டியுள்ளது.

இது குறித்து, சமூக ஆர்வலர் பி.விஸ்வநாதன் கூறியதாவது: மக்கள் நலனுக்காக, அரசு செயல்படுத்தும் திட்டத்தின் பயன் சரியான நபர்களை சென்றடைய வேண்டும் என்பது முக்கியம். அதே நேரத்தில், இந்த சரிபார்த்தலுக்காக மக்களை, ஒரே துறையில் ஒவ்வொரு சான்றிதழுக்காக அலைய விடுவது நல்லதல்ல. இது போன்ற திட்டங்களுக்கு விண்ணப்பிக்கும் போது, தேவையான அனைத்து தகவல்களையும் ஒரே கட்டமாக பெற வேண்டும்.

அதன் அடிப்படையில், அதிகாரிகள் ஒற்றை சாளர முறையில் ஆய்வு செய்து, முடிவுகள் எடுக்க வேண்டும். ஆதார், ரேஷன் அட்டை, 'பான் கார்டு' போன்ற வழிமுறைகள் வந்துள்ள நிலையில், இதற்கான நடைமுறைகள் மாற்றப்பட வேண்டும். குறிப்பிட்ட நாட்களுக்குள் விண்ணப்பத்தை பரிசீலித்து முடிவு எடுக்க காலக்கெடு நிர்ணயிக்கப்பட வேண்டும். குறிப்பிட்ட காலக்கெடுவில், அதிகாரி முடிவு எடுக்கவில்லை என்றால், அந்த கோப்புக்கு மேல்அதிகாரியால் ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும். அதற்கு ஏற்ப நடைமுறை கள் மாற்றப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

உத்தரவு

இது குறித்து, வருவாய் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழக அரசின் பல்வேறு துறைகளில் சுயசான்று அடிப்படையில், மக்கள் அளிக்கும் ஆவணங்களை ஏற்று, தானியங்கி முறையில் கட்டட அனுமதி, உரிமங்கள் வழங்கப் படுகின்றன. வருவாய் துறை பணிகளிலும் சுயசான்று நடைமுறையை பின்பற்ற, அரசு உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக, விண்ணப்பதாரரின் பொருளாதார நிலை, வருமானம், இருப்பிடம் ஆகியவற்றை உறுதிப்படுத்த, தனித்தனி சான்றிதழ்கள் கேட்பதற்கு பதில், சுயசான்று முறையில் இப்பணிகளை முடிக்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன் அடிப்படையில், எந்தெந்த திட்டத்தில் என்னென்ன சான்றிதழ்களை தவிர்த்து, சுயச்சான்று முறையில் தேவையான தகவல்களை பெறலாம் என்பதற்கான பட்டியலை தயாரித்து வருகிறோம். இந்த வகையில், செல்வ நிலை சான்று வழங்கும் நடைமுறை சமீபத்தில் நிறுத்தப்பட்டது. இதுபோன்று நிறுத்தப்பட வேண்டிய சான்றிதழ்கள் விபரம் விரைவில் இறுதி செய்யப்படும். காலத்துக்கு ஒவ்வாத சான்றிதழ்களுக்கு விடைகொடுப்பதால், அதிகாரிகளுக்கான பணிச்சுமை குறைவதுடன், அரசு திட்டங்களின் பயன் மக்களுக்கு விரைவாக கிடைக்க வழி ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.

அலைச்சல் ஏற்படுத்தும் சான்றிதழ்கள்

* சொத்து விபரம் அறிவதற்கான செல்வ நிலை சான்று.
* வசிப்பிடத்தை உறுதி செய்வதற்கான இருப்பிட சான்று.
* குடும்ப வருமான விபரத்தை உறுதி செய்யும் வருமான சான்றிதழ்.
* முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ்.
* சிறு விவசாயி என்பதை உறுதி செய்யும் சான்றிதழ்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us