தொல்லை அழைப்புகளுக்கு இன்று முதல் விடுதலை
தொல்லை அழைப்புகளுக்கு இன்று முதல் விடுதலை
தொல்லை அழைப்புகளுக்கு இன்று முதல் விடுதலை

புதுடில்லி : டெலி மார்க்கெட்டிங் நிறுவனங்களிடம் இருந்து, மொபைல் போன்களுக்கு வரும் தொல்லை தரும் அழைப்புகளில் இருந்து, வாடிக்கையாளர்களுக்கு இன்று முதல் விடுதலை கிடைக்கவுள்ளது.
வீட்டுக் கடன், இன்சூரன்ஸ் போன்ற விஷயங்களுக்காக, நேரம் காலம் இல்லாமல், தொடர்ந்து அழைப்புகள் வந்தன. மத்திய அமைச்சரவை கூட்டங்கள் நடக்கும்போதும், அமைச்சர்களுக்கும் இதுபோன்ற தொல்லை அழைப்புகள் வந்ததால், பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது.
இதையடுத்து, தொல்லை தரும் அழைப்புகளை தடுப்பதற்கான நடவடிக்கைகளை, மத்திய தொலைத்தொடர்பு துறை ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) மேற்கொண்டது. இதன்படி, 'வாடிக்கையாளர் விருப்ப பதிவேடு உருவாக்கப்பட்டு, அதில் முறைப்படி பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, தொல்லை தரும் அழைப்புகள் மற்றும் எஸ்.எம்.எஸ்.,கள் வராமல் தடுக்கப்படும்' என, அறிவிக்கப்பட்டது.
இந்த விதிமுறைகளை மீறி, தொல்லை தரும் அழைப்புகள் மற்றும் எஸ்.எம்.எஸ்.,கள் வந்தால், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு, 2.5 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என, அறிவிக்கப்பட்டது. எஸ்.எம்.எஸ்., விஷயத்தை பொறுத்தவரை, ஒரு, 'சிம் கார்டு'க்கு, ஒரு நாளைக்கு, தினமும் நூறு எஸ்.எம்.எஸ்.,களுக்கு மேல் அனுப்ப, அனுமதி மறுக்கப்படுவதாகவும், டிராய் அறிவித்தது.
ஆனாலும், சில தொழில்நுட்ப பிரச்னைகள் காரணமாக, இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவது, கால தாமதமானது. இந்நிலையில், நாளை (இன்று) முதல், இத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளதாக, தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய செல்லுலார் ஆபரேட்டர் சங்க இயக்குனர் ராஜன் மாத்யூ கூறுகையில், 'எங்களின் ஆபரேட்டர்கள் அனைவரும், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரையை நிறைவேற்ற தயாராக உள்ளோம். இருந்தாலும், ஒருநாளைக்கு நூறு எஸ்.எம்.எஸ்., என்பது குறித்த விஷயம் பற்றி பேச்சு நடத்தவுள்ளோம்' என்றார்.